பெண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைகள்


பெண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 19 Feb 2023 1:30 AM GMT (Updated: 19 Feb 2023 1:30 AM GMT)

தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அன்றாடம் எழுதும் பழக்கம் கொண்டவர்களால், தங்களது உணர்வின் வேகத்தை சீரான நிலையில் பராமரிக்க முடியும்.

வ்வொரு புது வருடத்தின் தொடக்கத்திலும், பல்வேறு உறுதிமொழிகளை எடுப்பது பெரும்பாலானவர்களின் வழக்கம். அவற்றை எந்த அளவுக்கு கடைப்பிடித்து நிறைவேற்றுகிறார்கள் என்பது, அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். தற்போது உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். புது வருடம் தொடங்கி ஒரு மாதமே முழுமையாக கழிந்திருக்கும் நிலையில், அதனை தவிர்க்க ஆரோக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை புதிதாக ஆரம்பிக்கலாமே.

உங்களால் செய்ய முடிந்த எளிமையான சிறு சிறு முயற்சிகளைத் தொடர்ந்து செய்தால் ஆரோக்கியம் மேம்படும். அவற்றுக்கான ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.

குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தின் நிலை என்னவென்று தெரியாமல், அன்றாடம் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கின்றனர். எனவே 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், வருடத்தில் ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இந்த ஆண்டில் இருந்து தொடங்கி, இனி ஒவ்வொரு வருடமும் இதைக் கடைப்பிடித்து வரலாம்.

40 வயதுக்குப் பிறகு பெண்களுக்கு ரத்தசோகை, கால்சியம் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். அதனால் தினசரி உணவில் கீரை வகைகள், முழுதானியங்கள், சிறுதானியங்கள், பேரீட்சை, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து வரலாம்.

பெண்கள் தங்கள் வயது மற்றும் உயரத்துக்கேற்ப உடல் எடையை பராமரிப்பது முக்கியமானது. திருமணம் ஆன பெண்கள் பலரும் புத்தாண்டில் உடல் எடை பராமரிப்பு குறித்த தீர்மானத்தை எடுப்பதும், அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்காமல் கைவிடுவதும் அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. வீட்டில் இருந்து தனியாகப் பயிற்சிகள் செய்வதை விட, ஜிம், யோகா மையங்கள் போன்றவற்றுக்குச் சென்று குழுவாக செயல்படலாம். இதனால் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொண்டே பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது அனைத்து வயது பெண்களும் ஸ்மார்ட்போன் உபயோகித்து வருகின்றனர். கல்வி, வேலை, தொழில் போன்ற காரணங்களால் கணினி பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இதனால் கண்கள் பாதிக்கப்படக்கூடும். எனவே அனைத்து பெண்களும் ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் கண் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

இல்லத்தரசிகள் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை மன அழுத்தம். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அன்றாடம் எழுதும் பழக்கம் கொண்டவர்களால், தங்களது உணர்வின் வேகத்தை சீரான நிலையில் பராமரிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

அதாவது, உணர்வுகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்தும் பழக்கம், பிரச்சினைகளுக்குரிய தீர்வை புதிய தளங்களில் தேடும் முயற்சியாகக் கருதப்படுகிறது. அதனால் ஒருவரது செயல்திறன் அதிகரிக்கும். அவ்வாறு எழுதுவதன் மூலம் ஏற்படும் மாற்றத்தால் மூளையின் செயல்பாடு, செல்களின் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவை அதிகரித்து மனஅழுத்தம் குறையும். எனவே டைரியில் தினமும் மனதில் தோன்றிய கருத்துக்களை எழுதும் தீர்மானத்தை இந்த ஆண்டு முதல் தொடங்கலாம்.


Next Story