நோய்களைக் கட்டுப்படுத்தும் யோகா


நோய்களைக் கட்டுப்படுத்தும் யோகா
x
தினத்தந்தி 3 July 2022 1:30 AM GMT (Updated: 2022-07-03T07:01:16+05:30)

உடலில் ரத்த அழுத்த மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை முறையான யோகாசனப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். குறைந்த ரத்த அழுத்தத்தினைப் பச்சிமோத்தாசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம், பாத கோனாசனம், சேது பந்தாசனம், அர்த்த ஹலாசனம் போன்ற ஆசனங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

நாம் வாழும் முறையில் தான், நமது உடல் ஆரோக்கியம் அமைந்துள்ளதாகக் கூறுகிறார் சென்னையை சேர்ந்த யோகா ஆசிரியர் அனுராதா ரங்கராஜ். இவர் 'யோகா சக்கரவர்த்தனி' விருது பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளில்,10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார். புதுச்சேரி அரசு நடத்தும் 'சர்வதேச யோகாசனப் போட்டிகளின் தேர்வுக் குழு'விலும் இடம் பெற்றிருக்கிறார்.

''மனித உடலில் இருக்கும் நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்துமே முறையான அளவில் சுரக்க வேண்டும். அப்போது தான் உடல் உறுப்புகள் பாதிப்படையாமல் ஒழுங்காகச் செயல்படும். இன்சுலின், தைராய்டு உள்ளிட்ட பல சுரப்பிகளில், ஏதேனும் ஒரு சுரப்பியின் சமநிலை தவறினாலும், மனித உடல் தனது செயல்பாடுகளில் தடுமாறும். அவ்வாறு தவறும் போது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து யோகாசனம் செய்து வருவதன் மூலம் இவற்றை குணப்படுத்தலாம்.

ரத்தத்தில் உப்பின் அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், இதயத்தின் செயல்பாடுகள் பாதிப்படையும். நாம் கசப்பு, துவர்ப்பு உள்ளிட்ட அறுசுவைகளையும் சமமாக உண்பதில்லை. மாறாக நாக்கின் சுவை விருப்பத்திற்கு ஏற்ப உணவை சாப்பிடுவதால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

உடலில் ரத்த அழுத்த மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை முறையான யோகாசனப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். குறைந்த ரத்த அழுத்தத்தினைப் பச்சிமோத்தாசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம், பாத கோனாசனம், சேது பந்தாசனம், அர்த்த ஹலாசனம் போன்ற ஆசனங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். உயர் ரத்த அழுத்தத்தை பாலாசனம், தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை சீராக்கும்.

வயிற்றுப் பகுதிதான் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்பதால், அதற்குரிய பயிற்சிகளையும், செயல்பாட்டையும் முறையாக்க வேண்டும்.

இரவில் நேரம் தவறி சாப்பிடக்கூடாது. இரவு உணவை 7 மணிக்கு முன்பே முடித்து விட வேண்டும். உணவுக் கட்டுப்பாடும் அவசியம். ஆசனப் பயிற்சிகள் மூலம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். பசி உணர்வை அதிகரிக்கச் செய்யலாம். தூக்கமின்றி தவிப்பவர்களுக்கும், குழந்தைகள் படிப் பில் கவனம் செலுத்துவதற்கும் யோகாசனத்தில் பயிற்சிகள் இருக்கின்றன. இவ்வாறு பல்வேறு உடல் உபாதைகள், சிக்கல்களுக்கும் யோகா மூலம் தீர்வு காண முடியும்.

இந்த அவசர உலகில் ஆண், பெண், மாணவர்கள் அனைவருமே நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். தகுந்த யோகாசனங்கள் மூலம் தங்கள் உடலினை அனைவரும் பேணிக்காப்பது சிறந்தது'' என்கிறார் அனுராதா ரங்கராஜ்.


Next Story