பச்சை பட்டாணியைப் பதப்படுத்தி வைக்கும் முறை


பச்சை பட்டாணியைப் பதப்படுத்தி வைக்கும் முறை
x
தினத்தந்தி 12 Feb 2023 1:30 AM GMT (Updated: 12 Feb 2023 1:30 AM GMT)

தற்போது விலை மலிவாகக் கிடைக்கும் பச்சைப் பட்டாணியை ‘பிளான்ச்சிங்’ முறையில் பதப்படுத்தி, குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பதன் மூலம் அதன் சத்துக்களை இழக்காமல் வருடம் முழுவதும் பயன்படுத்த முடியும்.

லருக்கும் பிடித்த காய்கறி வகைகளில் பச்சைப் பட்டாணியும் ஒன்று. பீஸ் புலாவ், குருமா, கட்லட், வெஜ் பிரியாணி என எல்லாவகை ரெசிபியிலும் பச்சைப் பட்டாணியை சேர்ப்பார்கள். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இரும்புச்சத்து, போலேட், கால்சியம், பாஸ்பரஸ், தையமின், மாங்கனீசு, ஆன்டி-ஆக்சிடன்டுகள், வைட்டமின்கள் ஏ, கே, சி போன்ற சத்துக்களும் உள்ளன.

தற்போது விலை மலிவாகக் கிடைக்கும் பச்சைப் பட்டாணியை 'பிளான்ச்சிங்' முறையில் பதப்படுத்தி, குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பதன் மூலம் அதன் சத்துக்களை இழக்காமல் வருடம் முழுவதும் பயன்படுத்த முடியும். இதை எப்போது வேண்டுமானாலும் சட்டென சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பச்சைப் பட்டாணியை எவ்வாறு பதப்படுத்துவது என்று இங்கே தெரிந்துகொள்வோம்.

  • முதலில் தரமான பச்சைப் பட்டாணியை தோலுடன் வாங்கி, உரித்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாதி அளவுக்கு தண்ணீர் நிரப்புங்கள்.
  • தண்ணீர் நன்றாகக் கொதிக்கும்போது அதில் பச்சைப் பட்டாணியைப் போடுங்கள்.
  • 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து, பட்டாணியை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பின்னர், நன்றாக குளிர்விக்கப்பட்ட தண்ணீரை எல்லா பட்டாணிகளின் மீதும் படும்படி ஊற்றுங்கள்.
  • தண்ணீர் முழுவதும் வடிந்த பின்பு, சுத்தமான பருத்தித் துணியில் பட்டாணிகளைப் போட்டு நிழலில் உலர்த்துங்கள்.
  • ஒரு மணி நேரம் கழித்து பட்டாணிகள் முழுவதுமாக உலர்ந்தவுடன் அவற்றை எவர்சில்வர் டப்பாக்களில் போட்டு, குளிர்சாதனப் பெட்டியின் பிரீசர் பகுதியில் வைத்து பத்திரப்படுத்துங்கள்.
  • தேவைப்படும் போது பட்டாணியை வெளியில் எடுத்து வைத்து, அறை வெப்பநிலைக்கு வந்ததும் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
  • இந்த முறையில் பட்டாணியைப் பதப்படுத்தினால் ஒரு வருடம் வரை பயன்படுத்த முடியும்.
  • ஜிப்லாக் கவர்களில் நீண்ட நாட்கள் வைத்தால் ஒருவித வாடை வீசும்.
  • பிளாஸ்டிக்கை விட எவர்சில்வர் டப்பாக்களை பயன்படுத்துவது நல்லது. ஒரு பெரிய டப்பாவில் மொத்த பட்டாணியையும் சேமித்து வைப்பதற்கு பதிலாக, 4 முதல் 5 டப்பாக்களில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

Next Story