தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரேவதி


தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரேவதி
x
தினத்தந்தி 24 July 2022 1:30 AM GMT (Updated: 24 July 2022 1:30 AM GMT)

நிறைய பெண்கள் குடும்பச்சூழல் காரணமாகப் பணிக்கு செல்கின்றனர். அந்த ஊதியம் அவர்களின் குடும்பத்துக்கு முக்கியமானதாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது, பணியிடத்தில் எந்தவிதமான பிரச்சினைகளை சந்தித்தாலும் அதை சகித்துக்கொண்டு போகும் சிலரை பார்த்தேன்.

பெண்களை உடல் மற்றும் மன அளவில் பாதிக்கும் குற்றங்களில் முக்கியமானது பாலியல் வன்முறை. வீடு, பணியிடம், சமூகம் உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கு இந்த அச்சுறுத்தல் இருக்கிறது. இதைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த ரேவதி ஜானகிராமன், பணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தில் இருக்கும் உள்ளகப் புகார் குழு தொடர்பாக, தனது அமைப்பின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முழுநேர வேலையாக செய்து வருகிறார். இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அதற்காக, 'சிறந்த சமூக சேவைப் பெண்' உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து…

"நான் கணினி பயன்பாடு, சமூகப் பணி ஆகிய துறைகளில் பட்டங்கள் பெற்றுள்ளேன். 19 ஆண்டுகளாக சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கணவர் ஜானகிராமன் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

எனது சிறு வயதிலேயே தந்தை எங்களைப் பிரிந்து சென்று விட்டார். தாயுடன் மட்டுமே வளர்ந்ததால், சமூகத்தில் பல பிரச்சினைகளை சந்தித்தோம். நாங்கள் அனுபவித்த சங்கடங்களை பிறர் சந்திக்கக்கூடாது, முடிந்தவரை மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தால் 2017-ம் ஆண்டு முதல் முழு நேரமாக இந்தப் பணியை செய்து வருகிறேன்."

தொழிலாளர்களிடம் பாலியல் புகார் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணம் எப்படி வந்தது?

நிறைய பெண்கள் குடும்பச்சூழல் காரணமாகப் பணிக்கு செல்கின்றனர். அந்த ஊதியம் அவர்களின் குடும்பத்துக்கு முக்கியமானதாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது, பணியிடத்தில் எந்தவிதமான பிரச்சினைகளை சந்தித்தாலும் அதை சகித்துக்கொண்டு போகும் சிலரை பார்த்தேன்.

அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி இது தொடர்பான சட்டத்தைப் பற்றி ஆழமாக நண்பர் மூலம் தெரிந்துகொண்டேன். பின்பு பணியிடங்களில் உள்ளகப் புகார் குழு அமைப்பது, அதைச் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றை செய்யத் தொடங்கினோம். இதைப் பாலினப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் செய்கிறேன்.

தொழிலாளர்களிடம் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறீர்கள்?

பணியிடங்களில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனியாக இந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கிராமங்களில் அரசாங்கம் உருவாக்கிய 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தின் மூலமாக விழிப்புணர்வை உண்டாக்குகிறோம்.

ஆரம்பத்தில் தங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்லத் தயக்கம் காட்டிய பெண்கள், இப்போது மாறியிருக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் பெண்கள் எந்த இடத்தில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்களோ, அதைச் சார்ந்த சமுதாயமும் மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் பாலியல் வன்முறையற்ற, பாதுகாப்பான சமூகத்தையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறேன். அதுவே எனது லட்சியம்.


Next Story