சைகை மொழி கற்றுக்கொள்ளும் பெற்றோருக்கான ஆலோசனைகள்


சைகை மொழி கற்றுக்கொள்ளும் பெற்றோருக்கான ஆலோசனைகள்
x
தினத்தந்தி 12 March 2023 1:30 AM GMT (Updated: 12 March 2023 1:31 AM GMT)

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இணைந்து சைகை மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் எளிதாகவும், ஆழமாகவும் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியும்.

பேசும் மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர், சைகை மொழி கற்றுக்கொள்வது முக்கியமானது. இத்தகைய குழந்தைகளின் முதன்மையான தகவல் தொடர்பு வழிமுறையாக, சைகை மொழி இருக்கும். எனவே பெற்றோர் அதை கற்றுக்கொள்வதற்கு தயக்கமின்றி முன்வர வேண்டும். இதனால் உங்கள் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, எளிதாக அவர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

பேசும் மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளி குழந்தைகளில் பெரும்பாலானோர், எந்தக் குறைபாடும் இல்லாத ஆரோக்கியமான பெற்றோர்களுக்கு பிறந்தவர்களே. எனவே இவர்களை இணைக்கும் பாலமாக சைகை மொழி செயல்படுகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இணைந்து சைகை மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் எளிதாகவும், ஆழமாகவும் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் பெற்றோருடன் சேர்ந்து சைகை மொழி கற்கும்போது, குழந்தைகளின் தாய்மொழியைக் கற்கும் திறன் மேம்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போது, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சைகை மொழியைக் கற்றுக்கொடுக்கின்றன. நேரில் சென்று கற்றுக்கொள்ள முடியாதவர்கள், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இதுதவிர மொபைல் செயலிகள் மூலமும் சைகை மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்.

பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு இடைவெளி, குடும்ப உறவு மற்றும் குழந்தையின் கல்வி போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மருத்துவ ரீதியாக காது கேட்கும் கருவி மற்றும் இம்பிளான்ட் சிகிச்சை போன்றவற்றின் மூலம் தங்கள் குழந்தையின் குறையை நீக்கிவிட முடியும். அதனால் சைகை மொழி அவசியம் இல்லை என்று சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள். மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டாலும், மற்றொரு புறம் சைகை மொழியை தாங்களும் கற்றுக்கொண்டு, குழந்தைக்கும் கற்றுக்கொடுப்பது நல்லது.

குடும்பத்தினருடன் போதுமான தகவல் தொடர்பு கொள்ள முடியாதது, குழந்தைக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும். இது அவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் செயல்பாடுகளில் எதிரொலிக்கும். சமூகத்தின் விதிமுறைகளை அறிந்துகொள்வது, வேலைக்கான திறன்களை வளர்த்துக்கொள்வது, தனிப்பட்ட தொடர்புத் திறன்களைப் புரிந்துகொள்வது மற்றும் வெளிப்படுத்துவது, சுதந்திரமாக வாழ்வது போன்றவை சிரமமாக இருக்கும். எனவே, உங்கள் குழந்தையோடு இணைந்து சைகை மொழி கற்றுக்கொள்ளுங்கள். அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுங்கள்.


Next Story