மாற்றியோசித்து வெற்றி கண்ட அம்சவேணி


மாற்றியோசித்து வெற்றி கண்ட அம்சவேணி
x
தினத்தந்தி 26 Jun 2022 1:30 AM GMT (Updated: 26 Jun 2022 1:30 AM GMT)

பள்ளிப்படிப்பு முடிந்தபிறகு, பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு குடும்பம், மாடு, விவசாயம் என்று வாழ்க்கை நகரத் தொடங்கியது. தற்போது 12 மாடுகளை வளர்த்து வருகிறேன். அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று, பராமரித்து, பால் கறந்து கூட்டுறவுச் சங்கத்தில் விற்றுவந்தேன்.

டந்த 20 ஆண்டுகளாக பால் விற்பனை மட்டுமே செய்து வந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அம்சவேணி பொன்னுசாமி, மதிப்புக்கூட்டல் மூலம் ஆன்லைன் வழி பால்கோவா விற்கும் தொழில் முனைவோராக வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது தொழில் பயணத்தைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

''நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் மாடுகள் வளர்ப்பைத் துணைத் தொழிலாகச் செய்து வருகின்றனர். அதனால், சிறு வயதில் இருந்தே வயல் வேலைகளும், மாட்டுக் கொட்டகை வேலைகளும் எனக்கு அத்துப்படி.

பள்ளிப்படிப்பு முடிந்தபிறகு, பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு குடும்பம், மாடு, விவசாயம் என்று வாழ்க்கை நகரத் தொடங்கியது. தற்போது 12 மாடுகளை வளர்த்து வருகிறேன். அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று, பராமரித்து, பால் கறந்து கூட்டுறவுச் சங்கத்தில் விற்றுவந்தேன். 20 ஆண்டுகளாகப் பால் விற்பனையில் மட்டும் ஈடுபட்டு வந்தேன். பின்னர் தான் 'பால் விற்பனையைக் காட்டிலும், மதிப்புக்கூட்டி பால் தயாரிப்புகளில் ஏதாவது ஒன்றை விற்கலாம்' என்று யோசனை வந்தது.

எங்கள் பகுதியில் பெரும்பாலான கால்நடை விவசாயிகள் பாலை, தயிர், நெய் மற்றும் பாலாடைக்கட்டிகளாக்கி விற்பனை செய்து வந்தனர். எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பால்கோவா மிகவும் பிடிக்கும். அது மட்டுமின்றி, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்புகளில் ஒன்று பால்கோவா என்பதால், அதனைத் தரம் வாய்ந்ததாக தயாரித்து விற்கலாம் என்று முடிவெடுத்தேன்.

மதிப்புக்கூட்டலில் அதிக லாபம் கிடைப்பது போலவே, வேலைப்பளுவும் அதிகம். பால்கோவா தயாரிப்பதற்கு மட்டும் 3 மணி நேரமாகும். பாலைக் கிண்டுவதில் மட்டுமே கவனம் செலுத்திட வேண்டும். இல்லையென்றால், அடிபிடித்து விடும். ஆரம்பத்தில் சரியான மூலப்பொருள் அளவுகளையும், பால்கோவாவின் சரியான பதத்தினையும் கண்டறிவது சிரமமாக இருந்தது. பல முறை முயற்சித்த பிறகுதான் ருசியான பால்கோவா செயல்முறையைக் கற்றுக் கொண்டேன்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக தொழிலைத் தொடங்கினேன். தொடக்கத்தில் பாலை விற்பதை விட்டு தேவையில்லாத வேலை செய்வதாக உறவினர்கள் கூறினர். ஆனால், என் கவனம் முழுவதும் தொழிலை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதைப் பற்றி மட்டுமே இருந்தது.

இணையதளம் ஒன்றை ஆரம்பித்து, ஆன்லைன் விற்பனையைத் தொடங்கினேன். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளிநாட்டில் வசிப்பவர்களும் இந்தியாவில் இருக்கும் தங்கள் உறவினர்களுக்காக ஆர்டர் செய்கிறார்கள்.

இதனால் எனக்கு தன்னம்பிக்கையும், தரமான பொருளைக் கொடுக்கிற திருப்தியும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. வழக்கமாக செய்து கொண்டிருப்பதையே தொடராமல், அவ்வப்போது மாற்றி யோசித்து முயற்சியோடு செயல்பட்டால் வெற்றி எளிதில் வசமாகும் என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்'' என்கிறார் அம்சவேணி.


Next Story