சமூகப்பணிகள் செய்யும் தோழிகள்
எக்ஸ்போ பொருட்காட்சிக்காக நகை கண்காட்சி, ஆடைகள் கண்காட்சி, பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி போன்றவற்றை நடத்தினோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமான பெண்கள் எங்கள் ஸ்டால்களில் பொருட்களை வாங்கிச்சென்றார்கள். அதன் மூலம் கிடைத்த லாபத்தை சமூக நலப் பணிகளுக்கு செலவழித்தோம்.
மதுரையைச் சேர்ந்த தோழிகள் சசிகலா சரவணன், தேவசேனா முரளி, ஸ்ருதி மகேந்திரா மூவரும் ஒன்றுசேர்ந்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறார்கள். தற்போது இவர்களது சேவை அமைப்பில் மேலும் 88 பெண்கள் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்கிறார்கள். பெண்கள் மேற்கொண்ட இந்த முயற்சி பற்றி தெரிந்துகொள்வதற்காக அவர்களுடன் நடந்த உரையாடல்.
சேவை அமைப்பு தொடங்க காரணம் என்ன?
சமூகத்துக்கு எங்களால் இயன்ற பணிகளை செய்து வந்தோம். அதை மேலும் அதிகப்படுத்துவதற்கு நிதி உதவி தேவைப்பட்டது. தெரிந்தவர்கள், உறவினர்களிடம் தேடிச்சென்று நாங்கள் செய்யப்போகும் சமூக சேவை பற்றி விளக்கி நிதி உதவி பெறுவது கடினமாக இருந்தது.
இதனால் நாங்களே நிகழ்ச்சிகள் மற்றும் பொருட்காட்சிகள் நடத்தி, அதில் வரும் லாபத்தை சமூக சேவைக்கு செலவிட முடிவு செய்தோம்.
எக்ஸ்போ பொருட்காட்சிக்காக நகை கண்காட்சி, ஆடைகள் கண்காட்சி, பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி போன்றவற்றை நடத்தினோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமான பெண்கள் எங்கள் ஸ்டால்களில் பொருட்களை வாங்கிச்சென்றார்கள். அதன் மூலம் கிடைத்த லாபத்தை சமூக நலப் பணிகளுக்கு செலவழித்தோம்.
நீங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து செய்த சேவைகளைப் பற்றி கூறுங்களேன்?
மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துவரும் மாணவிகள், வயதிற்கு வந்ததும் படிப்பையே நிறுத்தி விடும் செய்தி அறிந்தோம். இதைப்பற்றி விசாரித்தபோது அதிர்ச்சியான தகவல் தெரிந்தது. அந்தப்பள்ளியில் இருந்த கழிவறைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருந்தன. இதனால் அவதியுற்ற மாணவிகள் படிப்பையே பாதியில் நிறுத்தும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
நாங்கள் உடனே எங்கள் சமூக அமைப்பு மூலம் கழிப்பறை மற்றும் குளியல் அறை, தண்ணீர் பிரச்சினை வராமல் இருக்க புதிய தண்ணீர் தொட்டி கட்டிக் கொடுத்தோம்.
இதுதவிர பல மரங்கள் நட்டு, மக்களிடையே மரம் நடும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறோம். ரத்ததான முகாம்கள் நடத்தி அரிதான ரத்த குரூப் வகைகள் கிடைக்க வழிசெய்து வருகிறோம். பள்ளிகளில் மாணவ, மாணவிகள் காலை உணவு, மதிய உணவு சாப்பிட புதிய தட்டுகள் வாங்கித் தருகிறோம்.
பள்ளிக்கூடங்களுக்கு தேவைப்படும் பீரோக்கள், வகுப்பறை பெஞ்சுகள், கரும்பலகைகள் தந்து உதவி வருகிறோம். அடிப்படை வசதிகளே இல்லாத அரசு பள்ளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.
மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி அளிக்க 'ஓடி விளையாடு பாப்பா' என்ற திட்டம் உருவாக்கி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வருகிறோம்.
கல்லூரிகளில் கல்விக்கட்டணம் செலுத்த சிரமப்படும் மாணவிகளுக்கு உதவுகிறோம். முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம், ஆடை தானங்கள் செய்து வருகிறோம். ஏழை பெண்களுக்கு நிதி திரட்டி திருமணங்களை நடத்தி வைக்கிறோம்.
மற்ற சமூக சேவை அமைப்புகளுடன் ஒன்றுசேர்ந்து வேலைவாய்ப்பு கோச்சிங் சென்டர் அமைத்து, திறமைமிக்க பலர் அரசு தேர்வுகள் எழுதி வேலைவாய்ப்பு பெற உதவி வருகிறோம். இது எங்களின் பெரிய முயற்சி. அனைத்து அரசு பணிகளுக்கும் பயிற்சி வகுப்பு நடத்த தகுந்த ஆசிரியர்களை நியமித்து வருகிறோம்.
இவ்வாறு தோழிகள் மூவரும் தாங்கள் சமூகத்துக்கு ஆற்றும் பணிகளைப் பற்றி தெரிவித்தார்கள்.