வீர விளையாட்டுகளில் சாதிக்கும் கனிஷ்கா


வீர விளையாட்டுகளில் சாதிக்கும் கனிஷ்கா
x
தினத்தந்தி 26 Jun 2022 1:30 AM GMT (Updated: 26 Jun 2022 1:31 AM GMT)

கனிஷ்கா சிலம்பக் கலையோடு மட்டுமில்லாமல், தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான வாள் பயிற்சி, சுருள்வாள், மல்லர் கம்பம், மல்லர் கயிற்றிலும் யோகா பயிற்சி எடுத்து வருகிறார்.

'சாதிப்பதற்கு மன உறுதி வேண்டும். பெண்களால் எந்த வயதிலும் சாதிக்க முடியும்' என்பதை வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கண்டித்தும், மரக்கால் அணிந்து 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றி, கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் கனிஷ்கா.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 வயது பள்ளி மாணவியான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி எடுத்து வருகிறார். தேசிய, மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் பங்கு பெற்றுத் தங்கம்

வென்றிருக்கிறார். இவரது சிலம்பம் ஆசிரியர் மேத்யூ இமானுவேல் மரக்கால் ஆட்டத்தைப் பற்றிய விவரங்களை மாணவர்களிடம் கூறும் போது, அதில் ஆர்வம் அதிகமாகி கனிஷ்கா தானும் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

அதன்படி அவரது ஆசிரியர் துணையுடன் இரண்டரை அடி உயரம் உள்ள மரக்காலை காலில் கட்டி பயிற்சியில் ஈடுபட்டார். ஒற்றைக் கம்பம், இரட்டை கம்பம் போன்றவற்றில் நின்று கொண்டு சிலம்பம் சுற்ற ஆரம்பித்தார். இதனை ஒரு உலக சாதனையாக மாற்றும் எண்ணத்தில் பத்து கிலோ மீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றுவதற்கு பயிற்சி மேற்கொண்டார். மரக்கால் ஆட்டம் என்பது பெரும்பாலும் ஆண்களே செய்யக்கூடியது. 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியான கனிஷ்காவின் பயிற்சியும், தன்னம்பிக்கையும் அவரை இந்தச் சாதனையைச் செய்ய வைத்தது.

கனிஷ்கா சிலம்பக் கலையோடு மட்டுமில்லாமல், தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான வாள் பயிற்சி, சுருள்வாள், மல்லர் கம்பம், மல்லர் கயிற்றிலும் யோகா பயிற்சி எடுத்து வருகிறார்.

2021-ம் ஆண்டு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

2021-ம் ஆண்டு டோலசா பல்கலைக்கழகத்தின் மூலம், நாட்டுப்புறக் கலையான சிலம்பத்தில் சிறந்து விளங்கியதற்காக 'வ.உ.சிதம்பரம் விருது' பெற்றார்.

தற்போது (2022-ம் ஆண்டு) கட்டைக்காலால் 10 கிலோ மீட்டர் நடந்து சிலம்பம் சுற்றியதற்காக 'கலாம் புக் ஆப் வேல்ர்டு ரெக்கார்டு' மூலமாக உலக சாதனை விருதும் பெற்றுள்ளார். இதுவரை இந்தச் சாதனையை யாரும் செய்தது இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

இது குறித்து கனிஷ்கா கூறும் போது, "தமிழரின் பாரம்பரியக் கலைகளை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி பல போட்டிகளில் கலந்து வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை. எனது ஆசான் என்னைப் பாராட்டும் போது உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகமாகும். சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும். பெண்கள் இதுபோன்ற வீர விளையாட்டுகளில் பயிற்சி எடுத்துக் கொண்டால் தன்னம்பிக்கையுடன் எதையும் சமாளிக்கலாம்" என்று கூறுகிறார் கனிஷ்கா.


Next Story