தலைமை பண்பும் சாதனைதான்


தினத்தந்தி 17 July 2022 1:30 AM GMT (Updated: 17 July 2022 1:30 AM GMT)

ஒரு அணியை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்வதற்கு தலைமைப்பண்பு முக்கியமானது. கேப்டன் ஆக வேண்டும் என்றால் முதலில் என்னை முழுவதுமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் முதலில் முன்னுதாரணமாக இருந்தால் மட்டுமே, அணியை வழிநடத்திச் செல்ல முடியும் என்று உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு என்னை தயார்படுத்திக் கொண்டேன்.

னது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் தடகளம் முதல் ஆக்கி வரை கால் பதித்து, முடியாது என்ற சொல்லை முறியடித்து, பல சாதனைகள் படைத்து வருகிறார் சாதனா. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த மயில்சாமி-விசாலாட்சி தம்பதியின் மகளான சாதனா, ஆரம்பம் முதல் உயர்நிலை கல்வி வரை தனது சொந்த ஊரிலேயே படித்தார். பின்பு மேல்நிலை கல்வியை திருவண்ணாமலையில் முடித்த இவர், தற்போது மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் கணித அறிவியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவருடன் நடந்த உரையாடல்.

ஆக்கி விளையாட்டில் ஆர்வம் வந்தது எப்படி?

எனக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தடகளத்தில் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்றேன். அவ்வப்போது மற்ற நண்பர்கள் ஆக்கி விளையாடுவதை பார்த்து, எனக்கும் அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் ஆக்கி விளையாட்டிலும் பயிற்சி மேற்கொண்டு வந்தேன். என்னுடைய முழு கவனத்தையும் ஆக்கி விளையாட்டில் செலுத்தி, தற்போது வரை தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று வருகிறேன்.

அணியை வழிநடத்திய தருணம் பற்றி?

ஒரு அணியை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்வதற்கு தலைமைப்பண்பு முக்கியமானது. கேப்டன் ஆக வேண்டும் என்றால் முதலில் என்னை முழுவதுமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் முதலில் முன்னுதாரணமாக இருந்தால் மட்டுமே, அணியை வழிநடத்திச் செல்ல முடியும் என்று உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு என்னை தயார்படுத்திக் கொண்டேன்.

விளையாட்டில் அணியில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்பும், ஒற்றுமையும்தான் அதை சிறப்பாக செயல்பட வைக்கும். எனவே எங்கள் அணியில் அனைவரும் கலந்து ஆலோசித்து, ஒவ்வொருவரின் ஆலோசனைக்கும் மதிப்பளித்து, விளையாடுவோம்.

ஒரு சில நேரங்களில் குழுவினர் தளரும்போது அவர்களை 'உன்னால் முடியும்' என்று ஊக்கப்படுத்துவேன். தவறுகளை திருத்திக்கொள்ள ஆலோசனை சொல்லுவேன். தகவல் பரிமாற்றம் சரியான முறையில் இருந்தால் மட்டுமே அணி சிறந்து விளங்கும். அதை உணர்ந்து செயல்படுவேன். இவ்வாறு மாநில அளவிலான போட்டிகள் உட்பட மொத்தம் 5 முறை கேப்டனாக அணியை வழிநடத்திச் சென்றுள்ளேன்.

உங்களின் வளர்ச்சியில் அதிகம் அக்கறை செலுத்துபவர்கள் யார்?

என்னுடைய பயிற்சி ஆசிரியர்கள் ஜூலியன் வசந்த், வினோத்குமார், ஜெகதீஷ் சந்திரன் ஆகியோர் எனது வளர்ச்சியில் அதிக அக்கறையோடு உதவி வருகின்றனர். பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே, எங்களுக்கு மற்ற நேரங்களில் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்கள். என் விளையாட்டிற்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கி என்னை வழிநடத்தி வருகிறார்கள். கல்லூரி பயிற்சியாளர் மரிய ஜான்பால் என்னை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்.

மறக்க முடியாத நிகழ்வுகள்?

சர்வதேச போட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட தருணத்தை என்னால் மறக்க முடியாது. ஏனெனில், அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள பெரும் போராட்டத்தை கடந்து வந்தேன். என் திறமையை மட்டும் மூலதனமாக வைத்து, அந்தப் போட்டியில் புதிய அணியினரோடு பங்கேற்றதை இப்போது நினைத்தாலும் நெகிழ்வாக இருக்கும்.

பங்கேற்ற போட்டிகள் மற்றும் பெற்ற பரிசுகள் குறித்து?

பஞ்சாப்பில் 2015-2016-ம் ஆண்டு 61-வது எஸ்.ஜி.எப்.ஐ. நேஷனல், மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு 8-வது ஜூனியர் நேஷனல், ஹரியானாவில் 7-வது சீனியர் நேஷனல் ஆகிய போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். 2021-2022-ம் ஆண்டு கர்நாடகா மங்களூரு பல்கலைக்கழகத்தில், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற மாநில சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளேன். 2019-2022-ம் ஆண்டு விருதுநகர் மற்றும் மதுரை கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம். 2017-2019-ம் ஆண்டு ராம்நாடு, சென்னையில் விளையாட்டு விடுதி சார்பில் நடந்த போட்டியில் முதலிடம். 2017-2018-ம் ஆண்டு

திருநெல்வேலியில் ஸ்டேட் லெவல் பாரதியார் தினத்தில் நடந்த போட்டியில் முதலிடம். 2018-2019-ம் ஆண்டு சென்னை சாய்ராம் இன்ஸ்டிடியூட் சார்பில் நடந்த ஸ்டேட் லெவல் போட்டியில் இரண்டாம் இடம். 2017-2018-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் மூன்றாம் இடம். தற்போது 2021- 2022 சென்னையில் நடைபெற்ற வி.ஆர்.பார்.யூ. காக்கி கிளப் ஓபன் ஸ்டேட் டோர்னமென்ட்டில் இரண்டாம் இடம் பெற்றிருக்கிறேன்.

தலைமை பண்பும் சாதனைதான்

ஆக்கியில் மேலும் திறமையாக விளையாடி, இந்திய அணியில் இடம்பெற்று நாட்டுக்காக விளையாட வேண்டும். வருங்காலத்தில், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இலவசமாக விளையாட்டு பயிற்சி அகாடமி நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னால் முடியும்வரை வளரும் தலைமுறைக்கு என்னுடைய பங்களிப்பை அளிக்க முயல்வேன்.


Next Story