கலையழகை வெளிப்படுத்தும் நகைப்பெட்டி தயாரிப்பு


கலையழகை வெளிப்படுத்தும் நகைப்பெட்டி தயாரிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2023 1:30 AM GMT (Updated: 25 Jun 2023 1:30 AM GMT)

நகைப்பெட்டியின் வெளிப்புற வடிவமைப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை, உள்பகுதிக்கும் கொடுக்க வேண்டும். உட்புற வடிவமைப்பே நகையின் பராமரிப்புக்கு பெரிதும் உதவும்.

லகம் முழுவதும் பலரும் விரும்பும் பரிசுப் பொருட்களில் நகைகள் முக்கியமானவை. அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் நகைப்பெட்டிகள் அதிக கவனம் ஈர்ப்பவை. பல்வேறு வகைகள் மற்றும் வடிவங்களில் நகைப்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அவரவரின் கற்பனைக்கு ஏற்றவாறு நகைப்பெட்டிகளை தயாரிக்க முடியும். நீங்கள் கலையின் மீது ஆர்வமும், கற்பனைத் திறனும் கொண்டவர் என்றால் நகைப்பெட்டி தயாரிப்பை சுயதொழிலாகவும் செய்ய முடியும். நகைப்பெட்டிகள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த தகவல்கள் இங்கே...

நகைப்பெட்டி தயாரிப்பதற்கு பெரிதாக இட வசதியும், பணியாளர்களும் தேவை இல்லை என்பதால் தயாரிப்புக்கான செலவு குறைவுதான். எனினும், நீங்கள் தயாரிக்கும் பெட்டியின் வகை மற்றும் தன்மையைப் பொறுத்து முதலீட்டில் மாற்றங்கள் ஏற்படலாம்.

காகிதம், அட்டை, மரம் மற்றும் உலோகங்கள் என நீங்கள் தயாரிக்க விரும்பும் நகைப்பெட்டியின் மூலப்பொருட்களை நகைகளின் வகைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். நகைகளை தனித்தனியாக அல்லது மொத்தமாக வைப்பதற்கு ஏதுவாக நகைப்பெட்டிகளில் பல வகைகள் இருக்கின்றன. தனியாக வைக்கப்படும் நகைகளுக்கு காகிதம் மற்றும் அட்டையாலும், மொத்தமாக நகைகள் வைப்பதற்கு மரம் மற்றும் உலோகத்தாலும் தயாரிக்கப்பட்ட நகைப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

நகைகளை தனித்தனியாக வைக்கும் நகைப்பெட்டி தயாரிப்பிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பரிசளிப்புக்குப் பயன்படுத்தப்படும் பெட்டி, மற்றொன்று சேமிப்புக்கான பெட்டி. இவற்றில் சேமிப்புக்குப் பயன்படுத்தப்படும் நகைப்பெட்டிகள் குறைந்த அலங்காரத்துடனும், இடத்தை மிச்சப்படுத்தும் விதமாகவும் இருக்கும்படி தயாரிக்க வேண்டும். பரிசளிப்புக்கான நகைப்பெட்டியை பார்ப்பவரை ஈர்க்கும் வகையிலான நிறம், வடிவமைப்பு, அலங்காரம் கொண்டதாகவும் தயாரிக்க வேண்டும்.

நகைப்பெட்டியின் வெளிப்புற வடிவமைப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை, உள்பகுதிக்கும் கொடுக்க வேண்டும். உட்புற வடிவமைப்பே நகையின் பராமரிப்புக்கு பெரிதும் உதவும். நகைப்பெட்டியின் உட்புறத்தை வடிவமைக்க ஸ்பாஞ்ச், மிருதுவான துணிகள் மற்றும் வெல்வெட் துணிகளைப் பயன்படுத்தலாம்.

காகிதம், அட்டையிலான நகைப்பெட்டிகளை வீட்டிலேயே தயாரிக்கலாம். உலோகம் மற்றும் மரத்தாலான நகைப்பெட்டிகளை அவற்றுக்கான தயாரிப்பாளர்களிடம் ஆர்டர் கொடுத்து வாங்கி, அதன் பின்னர் அதன் மேல்பகுதியில் நீங்கள் அலங்காரங்களை செய்யலாம்.

சந்தைப்படுத்துதல்:

கைவினைப் பொருட்கள் அதிகம் விற்கப்படும் இடங்களில் நகைப்பெட்டிகளின் தேவையும் அதிகமாக இருக்கும். ஆகையால், வீட்டிலேயே நகைகள் தயாரித்து விற்பவர்களுடன் இணைந்து தொழிலை மேற்கொள்ளலாம். சிறிய அளவிலான நகைக்கடைகளில் நகைகளின் அளவுக்கு ஏற்றபடி ஆர்டரின் பேரில் நகைப்பெட்டிகளை தயாரித்துக் கொடுக்கலாம். இதுமட்டுமில்லாமல் ஆன்லைன் மூலமாகவும் நகைப்பெட்டிகளை சந்தைப்படுத்தலாம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் நகைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், நகைப்பெட்டிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக கைவினை நகைப் பெட்டிகளுக்கு அதிக மதிப்பு அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக மொத்தமாகவும், ஆர்டரின் பேரிலும் நகைப்பெட்டிகளை தயாரித்து விற்பனை செய்யலாம்.


Next Story