பன்முகத்திறமையில் அசத்தும் அஞ்சலி


பன்முகத்திறமையில் அசத்தும் அஞ்சலி
x
தினத்தந்தி 7 Aug 2022 1:30 AM GMT (Updated: 7 Aug 2022 1:31 AM GMT)

சிறு வயது முதல் தினமும் டைரி எழுதும் பழக்கமே, எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் ஏற்படக் காரணமானது. ஆரம்பக் கல்வி படித்தபோதே கவிதைகள், கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன். இதுவரை முப்பத்தி ஐந்து வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். அதனால் உலக மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமானது.

மிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அஞ்சலி. இவரது தந்தை டெல்லியில் நீதிபதியாகப் பணியாற்றுவதால், இவரும் டெல்லிவாசியாகிவிட்டார். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் அஞ்சலி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருப்பதுடன், ஆங்கிலத்தில் கதை மற்றும் கவிதை புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

ஓவியம், நடனம், பாட்டு, விளையாட்டு போன்றவற்றிலும் ஈடுபட்டு தனது திறமையை மெருகேற்றி வருகிறார். அவரது பேட்டி.

கல்வி மீது இத்தனை ஈடுபாடு கொண்டது எப்படி?

கல்வி மட்டுமே வாழ்வில் பல வெற்றி சிகரங்களை தொட வைக்கும் என்பதை, என் தந்தை எனக்கு உணர்த்தியதால் ஆரம்ப வகுப்பு முதல் இப்போது வரை வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வருகிறேன்.

எழுதுவதில் நீங்கள் கொண்ட ஆர்வம் பற்றி கூறுங்கள்?

சிறு வயது முதல் தினமும் டைரி எழுதும் பழக்கமே, எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் ஏற்படக் காரணமானது. ஆரம்பக் கல்வி படித்தபோதே கவிதைகள், கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன். இதுவரை முப்பத்தி ஐந்து வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். அதனால் உலக மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமானது. ஆங்கிலத்தின் மீது ஆர்வம் அதிகம் என்பதால், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கில கவிதைகள் மற்றும் கதைகள் எழுதி சிலவற்றை நூலாக வெளியிட்டு இருக்கிறேன்.

உங்களுடைய மற்ற திறமைகள் பற்றி சொல்லுங்கள்?

இயற்கை மீது அதிகக் காதல் கொண்டவள் நான். எனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்கை அறிவு சார்ந்த ஓவியங்களை வரைந்து இருக்கிறேன். பகவத்கீதையை குழந்தைகளுக்கான கதைகளாக படித்து, பல்வேறு தொண்டு அமைப்புகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கூறி வருகிறேன். மேலும் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும், இது குறித்து அவ்வப்போது சொற்பொழிவாற்றி வருகிறேன்.

உங்களால் மறக்க முடியாத நிகழ்வு?

என் கவிதைகளை பியானோவில் இசை யமைத்து பாடல்களாக பாடி இருக்கிறேன். ஆஸ்திரேலியா நாட்டில், பெர்லின் நகரில் உள்ள இசைப்பள்ளி, என் பியானோ வாசிப்பு திறமை, பாடல்களை கம்போசிங் செய்யும் ஆற்றல், இனிமையாக பாடும் குரல் வளம் காரணமாக என்னை அழைத்து, பியானோ வாசிக்க வைத்து, பாட வைத்து பாராட்டி அனுப்பியதை மறக்க முடியாது.

நெகிழ்ச்சி ஏற்படுத்திய தருணம் எது?

சமீபத்தில், எனது தந்தை பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு அவரோடு சென்று, அந்த மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செய்து மகிழ்ந்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

உங்கள் எதிர்கால திட்டம் என்ன?

எனது தந்தை போல சட்டம் படித்து நீதிபதியாக வேண்டும். எதிலும் முதலாவதாக இருக்க வேண்டும்.


Next Story