பல மொழிகளில் உங்கள் குழந்தைகள் திறமைசாலி ஆக வேண்டுமா...?


பல மொழிகளில் உங்கள் குழந்தைகள் திறமைசாலி ஆக வேண்டுமா...?
x
தினத்தந்தி 11 Sept 2022 7:00 AM IST (Updated: 11 Sept 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

ஒரே வார்த்தையைத் தனக்கு அறிமுகமான பல மொழிகளில் எப்படிப் பேசுகிறார்கள் என்று, தொடர்ந்து கவனிப்பதன் மூலம் பன்மொழி சொல்லாடலில் குழந்தைகளின் ஆர்வம் அதிகரிக்கும்.

ங்கள் குழந்தைகள் பல மொழிகளிலும் புலமை பெற்று பன்முகத் திறமையாளராக விளங்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் ஆசைப்படுகிறார்கள். இதற்கு, பிறமொழிகளை கற்றுக்கொள்ள குழந்தை களுக்கு எந்த வயது சிறந்தது, எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

குழந்தையின் மூளை வளர்ச்சி அவர்களின் பத்து வயதுக்குள் 80 சதவிகிதம் முழுமை பெற்றுவிடும். எனவே, அந்த வயதில் அவர்களின் கற்றல் திறனும் வேகமாக இருக்கும். குழந்தைகளால் அவர்களின் 7 வயதுக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசவும், மூன்று மொழிகளை எழுதவும் கற்றுக்கொள்ள முடியும்.

புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது கேட்டல், உணர்தல், பேசுதல் முதலிய செயல்களே முதன்மை வகிக்கின்றன. தாய்மொழி அல்லாத பிற மொழிகளைப் பேசும் சமூகத்தில் வளரும் குழந்தைகளால், அந்த மொழியை எளிமையாகப் புரிந்து கொண்டு நாளடைவில் பேசவும் முடியும். இது இயல்பாகவே அவர்களுக்கு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் வளர்க்கும்.

ஒரே வார்த்தையைத் தனக்கு அறிமுகமான பல மொழிகளில் எப்படிப் பேசுகிறார்கள் என்று, தொடர்ந்து கவனிப்பதன் மூலம் பன்மொழி சொல்லாடலில் குழந்தைகளின் ஆர்வம் அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு வீட்டில் பேசும் தாய்மொழி தமிழாகவும், அந்த வீட்டின் பணிப்பெண் பேசுவது தெலுங்கு மொழியாகவும், சுற்றி இருக்கும் அக்கம் பக்கத்தினர் பேசுவது மலையாளம், இந்தி போன்ற பிற மொழி யாகவும் இருக்கும்பட்சத்தில், அந்தக் குழந்தை தொடர்ந்து பல மொழிகளின் ஓசையைக் கேட்கும் வாய்ப்புகள் உள்ளதால் மொழித்திறன் வளர்ச்சிக்கு மேம்படும்.

குழந்தைகைள சிறுவயதிலே அவர்களைப் பயிற்சி வகுப்புகளில் சேர்க்காமல், வீட்டில் வைத்தே முதலில் சிறு சிறு பயிற்சிகள் வழங்கலாம். ஒரு மொழியில் புது வார்த்தையைச் சொல்லி 'இது என்ன மொழி என்று கண்டுபிடி?' என்றோ, ஒரே வார்த்தையை பல மொழிகளில் எப்படிச் சொல்வார்கள் எனக் குழந்தைகளிடம் கேட்டு, அவர்களுக்கு புது மொழி வார்த்தைகளை அறிமுகப்படுத்தவோ செய்யலாம்.

முதல் மொழியை நன்றாகக் கற்ற பின்னர் 2-வது மொழியை சொல்லிக்கொடுங்கள். அதேசமயம் பொது இடங்களில் தாய் மொழியில் பேசக் கூச்சப்படாதீர்கள். தாய் மொழியில் பேசுவதைப் பெருமையாக நினைத்துக் கற்றுக் கொடுங்கள். தாய்மொழியில் குறும்பாடல்கள், கதைகள் சொல்ல பயிற்சி அளிக்கலாம்.

குழந்தைகளிடம் பேசுவதற்கு பிரத்தியேகமாக நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் டி.வி., அலைபேசி, வானொலி போன்ற உபகரணங்களால் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் குழந்தையின் பேசும் திறன் மேம்படும்.


Next Story