கற்றாழை ஜெல் தயாரிப்பு


கற்றாழை ஜெல் தயாரிப்பு
x
தினத்தந்தி 7 May 2023 1:30 AM GMT (Updated: 7 May 2023 1:31 AM GMT)

முதலில் நீங்கள் சிறிய அளவில் தயார் செய்து அதை பயன்படுத்திப் பாருங்கள். பிறகு அதிக அளவில் செய்து அழகான கண்ணாடி குடுவை, தயாரிப்பு பெயர், லேபிள் ஆகியவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தலாம்.

ருவகால மாற்றங்களால் சருமமும், கூந்தலும் அதிகமாக பாதிக்கப்படும். இதை தடுப்பதற்கு உதவும் இயற்கையான மாய்ஸ்சுரைசர் தான் கற்றாழை ஜெல். இதை சுகாதாரமான முறையில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். உங்கள் தேவைக்கு பயன்படுத்துவது மட்டுமில்லாமல், வணிக ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. கற்றாழை ஜெல் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

தயாரிப்பு முறை:

கற்றாழைச் செடியில் இருந்து ஒவ்வொரு மடல்களாக வெட்டி எடுக்கவும். அவற்றில் இருந்து மஞ்சள் நிற திரவம் வெளியேறும். இதில் 'அலாயின் காம்பவுண்டு' எனும் நச்சுப்பொருள் இருக்கும். அதை வெளியேற்றுவதற்கு, அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கற்றாழை மடல்களை அதில் போடவும். அரை மணி நேரம் கழித்து மஞ்சள் நிற திரவம் முழுவதும் வெளியேறி தண்ணீரில் கலந்திருக்கும். பிறகு அந்த தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டு, மீண்டும் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி மீண்டும் கற்றாழை மடல்களை அந்த தண்ணீரில் போடவும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரை ஊற்றி விட்டு, கற்றாழை மடல்களை சுத்தமாகக் கழுவிக்கொள்ளவும்.

பின்னர் மடல்களின் அடிப்பகுதியில் இருந்து ஒரு அங்குல அளவு மற்றும் இரண்டு ஓரப்பகுதிகளையும் வெட்டி நீக்கவும். அடுத்ததாக மடல்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

இப்போது அந்த துண்டுகளை குறுக்காக வெட்டினால், நடுவில் ஜெல் போன்ற சதைப்பற்று இருக்கும். அதை டீஸ்பூனால் சுரண்டி தனியாக எடுக்கவும். இவ்வாறு சேமித்த ஜெல் முழுவதையும், ஒரு மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளவும். இப்போது நுரையுடன் கூடிய கெட்டியான திரவம் கிடைக்கும்.

முறை 1:

இதை ஐஸ் டிரேக்களில் ஊற்றி, பிரீஸரில் வைத்து ஐஸ் கட்டிகளாக மாற்றிக்கொள்ளவும். தேவைப்படும்போது வெளியில் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் தேவையைப் பொறுத்து ஒரு வருட காலம் வரை இதை உபயோகப்படுத்த முடியும்.

முறை 2:

தேவையான பொருட்கள்:

தயாரித்து வைத்திருக்கும் கற்றாழை ஜெல் - 1 லிட்டர்

வைட்டமின் சி மாத்திரை - 8 மில்லிகிராம்

வைட்டமின் சி மாத்திரையை நன்றாக தூளாக்கிக் கொள்ளவும். அதை கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும். இதனை 6 முதல் 8 மாதங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

முறை 3:

தேவையான பொருட்கள்:

தயாரித்து வைத்திருக்கும் கற்றாழை ஜெல் - 1 கப்

டிஸ்டில்டு வாட்டர் - 1¼ கப்

ஜெலட்டின் - 3¼ டீஸ்பூன்

தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் ஜெலட்டின் கலந்து ஆறவைக்கவும். பிறகு அதனுடன் கற்றாழை ஜெல்லை கலக்கவும். இதை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 6 முதல் 8 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இந்த முறையில் தயாரித்தால் சந்தைப்படுத்துவது சுலபம்.

சந்தைப்படுத்துதல்:

முதலில் நீங்கள் சிறிய அளவில் தயார் செய்து அதை பயன்படுத்திப் பாருங்கள். பிறகு அதிக அளவில் செய்து அழகான கண்ணாடி குடுவை, தயாரிப்பு பெயர், லேபிள் ஆகியவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தலாம். அழகு நிலையங்கள், சூப்பர் மார்க்கெட், கண்காட்சி என பல் வேறு இடங்களில் விற்பனை செய்யலாம்.


Next Story