ஐப்பசி பௌர்ணமி.. கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரருக்கு 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
ஐப்பசி பௌர்ணமி.. கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
Published on

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவிலில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளார். இங்கு குகன் என்ற முருகப்பெருமான், சிவபெருமானை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் பெற்றுள்ளது.

இந்த கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் அமைந்துள்ள சிவலிங்கம் குமரி மாவட்டத்தில் மிக உயரமான ஐந்தரை அடி உயரமான சிலை ஆகும். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பௌர்ணமியான இன்று அன்னாபிஷேகம் நடந்தது.

அன்னாபிஷேக நிகழ்வை முன்னிட்டு இன்று காலையில் மூலவர் குகநாதீஸ்வரருக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. பின்னர் எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர்100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தை சாற்றி அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு அலங்கார சோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

இதே போல கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை யொட்டி இன்று அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து அன்னாபிஷேகமும் பின்னர் அன்னாபிஷேக அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது.

அதைத்தொடர்ந்து சக்கர தீர்த்த குளத்தில் மீன்களுக்கு அன்ன பூஜை நடந்தது. பின்னர் அன்ன தானம் நடந்தது. இதே போல குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com