

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், தளிகைவிடுதியில் பிரசித்திப்பெற்ற திருப்பணங்காருடையார் உடனாகிய ஆனந்தவள்ளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பூஜையின் நிறைவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் வானில் கருட பகவான் வட்டமிட கோவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.