வருடத்தில் 3 நாட்கள் மட்டுமே கவசமின்றி தரிசனம் தரும் ஆதிபுரீஸ்வரர்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கவசம் இன்றி காட்சி தந்த ஆதிபுரீஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொண்டை மண்டலத்தில் பிரசித்திப்பெற்ற 32 சிவ திருத்தலங்களில் ஒன்றான சென்னை திருவொற்றியூர் தியாகராஜசாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் படம்பக்கநாதர், ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார். சுயம்புவாக உருவானதாக கருதப்படும் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாக கவசம் அணிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஆண்டுக்கொருமுறை கார்த்திகை மாதம் பௌர்ணமியையொட்டி, 3 நாட்கள் மட்டும் ஆதிபுரீஸ்வரர் புற்றுவடிவ லிங்க திருமேனி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் நாக கவசம் திறக்கப்படும்.
அதன்படி நேற்று மாலை 6.30 மணிக்கு அதிபுரீஸ்வரரின் தங்க முலாம் பூசிய நாக கவசம் திறக்கப்பட்டது. தொடர்ந்து புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது அங்கிருந்த பக்தர்கள் ‘ஒற்றீஸ்வரா, ஆரூரா’ என பக்தி கோஷத்துடன் ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்தனர்.
நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த 3 நாட்களும் ஆதிபுரீஸ்வரருக்கு புனுகு சாம்பிராணி தைல அபிஷேகம், மகா அபிஷேகம் செய்யப்படும். சனிக்கிழமை இரவு 8 மணியளவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு மீண்டும் நாக கவசம் அணிவிக்கப்படும்.
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்ச்சி என்பது திருவொற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும்.
விழாவில் அமைச்சர் சேகர்பாபு, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.






