தசரா திருவிழா: நெல்லை தச்சநல்லூரில் அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு- திரளான பக்தர்கள் தரிசனம்

தச்சநல்லூரில் அணிவகுத்த அம்மன் சப்பரங்கள்
தச்சநல்லூரில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று முன்தினம் தசரா திருவிழா நடந்தது.
நெல்லை மாநகரத்தில் உள்ள பாளையங்கோட்டை, டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், கொக்கிரகுளம், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் கடந்த 21-ந்தேதி தசரா திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன், பேராச்சிஅம்மன், தூத்துவாரி அம்மன் முத்தாரம்மன் கோவில் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும், நெல்லை டவுனில் உள்ள புட்டாரத்தி அம்மன், மாரியம்மன் உள்ளிட்ட 34 அம்மன் கோவில்களிலும் கடந்த 2-ந்தேதி இரவில் சப்பரபவனி நடைபெற்றது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் பாளையங்கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு எருமைக்கடா மைதானத்தில் 12 அம்மன் கோவில் சப்பரங்களும் அணிவகுத்து நிற்க மகிஷாசுரனை, ஆயிரத்தம்மன் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் படப்பு பூஜை நடந்தது.
நேற்று காலையில் 12 அம்மன் கோவிலில் இருந்தும் அம்மன் தாமிரபரணி ஆற்றுக்கு எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் இரவில் அம்மன்கள் பூ பல்லக்கில் வீதி உலா நடந்தது.
தச்சநல்லூரில் உள்ள சந்திமறித்தம்மன், எக்காளியம்மன், துர்க்கைஅம்மன், உலகம்மன், துர்க்கையம்மன், முத்துமாரியம்மன் வாழவந்தஅம்மன், உச்சிமாகாளியம்மன் ஆகிய அம்மன் கோவில்களில் நேற்று முன்தினம் தசரா திருவிழா நடந்தது. நேற்று காலையில் இந்த அம்மன் கோவில் சப்பரங்கள் அனைத்தும் தச்சநல்லூர் பகுதியில் செண்டை மேளம் முழங்க பவனி வந்தன.
மதியம் 1 மணிக்கு சப்ரங்கள் சந்திமறித்தஅம்மன் கோவில் அருகே அணிவகுத்து நின்றன. அப்போது சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் கோவில் சப்பரங்களுக்கு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள முத்தாரம்மன், புதுஅம்மன், உச்சிமகாளிஅம்மன் கோவில்களில் தசரா திருவிழா நேற்று நடந்தது. காலையில் பால்குட ஊர்வலமும், மதியம் சிறப்பு ஹோமமும், அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. நள்ளிரவில் 3 அம்மன் கோவில்களின் சப்பரபவனி நடந்தது.






