திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருப்பு

நேற்று ஒரே நாளில் மட்டும் 83 ஆயிரத்து 621 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டுள்ளனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வார இறுதி விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள டோல்கேட்டை கடந்து செல்வதற்காக சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை பக்தர்களின் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி, சிலாத்தோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) டோக்கன்கள் இல்லாத இலவச தரிசன பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 83 ஆயிரத்து 621 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டுள்ளனர்.