

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் ராஜேந்திர சோழனால் கலை நயத்துடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. போர் கைதிகள் மற்றும் வீரர்களைக் கொண்டு 4.5 ஏக்கர் பரப்பளவில் தற்கால பொறியியல் வல்லுனர்களுக்கு சவால் விடும் வகையில், இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலை இந்து சமய அறநிலைய துறையினர் நிர்வாகித்து வருகின்றனர்.
இக்கோவிலில் உள்ள கொடிமரத்தை பழுதுபார்த்து மராமத்து பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக கொடிமர பாலாலயம் இன்று நடைபெற்றது. பணி தொடங்குவதற்காக பழுது கண்டறியப்படுவதற்காக கடலூர் இணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, கடலூர் துணை ஆணையர்/ நகை சரிபார்ப்பு மற்றும் குழுவினர் மற்றும் மண்டல சபதி மற்றும் சரக ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் கொடிமரத்தில் சாற்றப்பட்ட செப்பு தகடுகள் பிரித்து ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் அவற்றின் எடை பதிவு செய்யப்பட்டு, கோவில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
பாலாலயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் கொடிமரத்தை பழுதுபார்க்கும் பணி நடைபெறும். இப்பணி நிறைவுபெற்றதும் கொடிமரத்தில் மீண்டும் செப்பு தகடுகள் பதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.