திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்


திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்
x

'குரு தலம்' என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில் முக்கிய பரிகார தலமாக விளங்குகிறது.

தூத்துக்குடி

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. கடற்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்து சிவபெருமானை வழிபடுகிறார்.

கோவிலில் மூலவராக சுப்பிரமணிய சுவாமி காட்சி அளிக்கிறார். உற்சவர்களாக ஜெயந்திநாதர், சண்முகர், குமரவிடங்க பெருமான், அலைவாயுகந்த பெருமான் அருள்பாலிக்கின்றனர். கோவிலில் விநாயகர், பார்வதி தேவி, சுவாமி வீரபாகுமூர்த்தி, வீரமகேந்திரர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், வள்ளி, தெய்வானை, சூரசம்ஹார மூர்த்தி, பாலசுப்பிரமணியர், மயூரநாதர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சனி பகவான், பைரவர், அருணகிரிநாதர் என அனைத்து சுவாமிகளுக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் இடது பக்கத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அவருக்கு 'ஜெகநாதர்' என்று பெயர். மூலவருக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் கால பூஜை, தீபாராதனை அனைத்தும் இவருக்கும் நடைபெறும்.

முருகனின் வலது கையில் தாமரை மலர் இருக்கும். தாமரை மலரால் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். மூலவருக்கு பின்புறம் சிறுபாதை வழியாக சென்றால் அங்கு பஞ்சலிங்கம் (5 லிங்கம்) இருக்கிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி தல வரலாற்று சிறப்பு கொண்டதால் குரு வழிபாடு சிறப்பிக்கப்படுகிறது. எனவே நவக்கிரக வழிபாடு இல்லை.

திருச்செந்தூர் நாழிக்கிணறு தீர்த்தம் பிரசித்தம். சண்முகர் சந்நிதிக்கு தெற்கே நடைபாதை வழியே சென்றால் நாழிக்கிணற்றை அடையலாம். இறைக்க இறைக்க அதே அளவில் தண்ணீர் பெருகுவது இதன் தனிப்பெருமை. இதன் ஆழம் 7 அடிதான். உவர் நீர் கடல் அருகே நன்னீர் பெருகி வருவது பெரு வியப்பு. முருகப்பெருமான் தன் படைவீரர்கள் தாகம் தணிக்க இங்கு வேலால் குத்தி இந்த நாழிக்கிணற்றை உருவாக்கியதாகவும், சூரனை வென்றபின் தாமே இதில் மூழ்கி எழுந்ததாகவும், பாபம் தொலையப் படைகளும் மூழ்கின எனவும் தலபுராணம் கூறுகிறது.

கோவில் வளாகத்தில் வள்ளிக்குகையின் அருகே சந்தனமலை உள்ளது. திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் அமைய வேண்டி இந்த சந்தனமலையில் மஞ்சள் கயிறும், குழந்தை இல்லாத தம்பதியர் தொட்டிலும் கட்டி வழிபடுகிறார்கள்.

'குரு தலம்' என்று அழைக்கப்படும் இக்கோவில் முக்கிய பரிகார தலமாகவும் விளங்குகிறது. குருப்பெயர்ச்சி தினத்தன்று லட்சக் கணக்கான பக்தர்கள் மூலவர் மற்றும் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வழிபடுவார்கள். கோவிலில் தங்க கொடிமரம், செப்பு கொடிமரம் என 2 கொடிமரங்கள் உள்ளன.

கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் கோவிலில் 2.7.2009-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை பந்தலில் 76 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நாளை காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்களுக்கும், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்க பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

1 More update

Next Story