கன்னியாகுமரி: 12 சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு- திரளான பக்தர்கள் பங்கேற்பு


கன்னியாகுமரி: 12 சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு- திரளான பக்தர்கள் பங்கேற்பு
x

பிரதோஷத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் குகநாதீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளார்.

இங்கு குகன் என்ற முருகப்பெருமான், சிவபெருமானை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக் காரணமாயிற்று. குமரி மாவட்டத்திலேயே மிகவும் உயரமான ஐந்தரை அடி உயர சிவலிங்கம் இந்த கோவிலில் அமைந்து உள்ளது சிறப்பாகும். இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. எண்ணெய், பால், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோல கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசி விஸ்வநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்தலிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய சிவாலயங்களிலும் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story