கார்த்திகை மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்

கிரிவலம் சென்ற பக்தர்களில் ஒரு பகுதி
மகா தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமும் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை மற்றும் மாலையில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலையில் கோவிலில் மகா தீபம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கொடியிறக்கம் நடைபெற்றது.
அதன்பின்னர் இரவில் பஞ்சமூர்த்திகள்வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து விடிய, விடிய பக்தர்கள் நேற்று காலை வரையில் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அவர்கள் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கார்த்திகை மாதத்திற்கான பௌர்ணமி நேற்று காலை 7.58 மணிக்கு தொடங்கியது. பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் நேற்று மாலையில் அதிகரிக்க தொடங்கியது. 2-ம் நாள் மகா தீபத்தை கண்டு வணங்கியபடி இரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பௌர்ணமி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிறைவடைந்தது. இதனால் அதிகாலை வரையில் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
மகா தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது. குடிநீர் போன்ற அடிப்படைகள் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பெரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகாமல் பஸ்களில் வந்து சென்றனர்.
மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி இடம் பிடித்தனர். மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருந்தது.
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 3 நாட்கள் நடைபெறும். அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் நேற்று இந்த உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று இரவு, அங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பக்குளத்தின் கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், நாளை (சனிக்கிழமை) சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.






