சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறப்பு.. பக்தர்களுக்கு மூன்று நாட்கள் ஓண விருந்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதையடுத்து 18-ம் படிக்கு கீழ் பகுதியில் உள்ள கற்பூர ஆழியில் மேல்சாந்தி தீ மூட்டினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. நாளை திருவோண தினத்தன்று சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (7-ந் தேதி) இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.
அன்றைய தினம் 9.30 மணிக்கு மேல் சந்திரகிரகணம் என்பதால் தந்திரியின் உத்தரவுப்படி, அன்றையதினம் இரவு 9 மணிக்கே கோவில் நடை அடைக்கப்படுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு (செப்டம்பர் 4, 5, 6) அய்யப்ப பக்தர்களுக்கு ஓண விருந்து (ஓண சத்யா) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.






