திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம் தொடங்கியது

பவித்ரோற்சவ காலங்களில் தினமும் காலை சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம் சாற்றுமறை, மாலையில் பெருமாள் மாடவீதி புறப்பாடு நடைபெறும்.
கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளின்போது, அறிந்தோ அறியாமலோ அர்ச்சகர்கள், ஆலய ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செய்யும் தவறுகளால் நிகழும் தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக ஆகம விதிகளின்படி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று பவித்ரோற்சவம் தொடங்கியது.
முதல் நாளான இன்று காலையில் உற்சவர் வைத்திய வீரராகவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்பின்னர், சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், பவித்ரம் சமர்ப்பித்தல், சாற்றுமறை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
வரும் 13ம் தேதி வரை பவித்ர உற்சவம் நடைபெறும். இந்த உற்சவ காலங்களில் தினமும் காலை சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம் சாற்றுமறை, மாலையில் பெருமாள் மாடவீதி புறப்பாடு, இரவு சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாற்றுமறை நடைபெறும்.
மேலும் கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை காலை, 8 மணி முதல், 11:00 மணி வரையும், இரவு 7:00 மணி முதல், 8:30 மணி வரையும் நடைபெறும். உற்சவர் வைத்திய வீரராகவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும்.






