புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இதனால் திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலாத்தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம், குடிநீர், மோர், பால் ஆகியவற்றை ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் வழங்கினர். அதேபோல் நாராயணகிரி தோட்டத்தில் உள்ள ஜெர்மன்செட் கொட்டகைகளில் பக்தர்கள் நிரம்பினர்.
இலவச தரிசனத்தில் 18 மணிநேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். ரூ.300 டோக்கன் பெற்றவர்கள் 4 மணிநேரம் காத்திருந்தும், சர்வ தரிசன டோக்கன் பெற்றவர்கள் 6 மணிநேரம் காத்திருந்தும் தரிசனம் செய்கின்றனர். நேற்று மட்டும் 73,581 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடி கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.






