திருப்பதி மலைப்பாதைகளில் இன்று இருசக்கர வாகனங்கள் செல்ல தடை

இன்று மாலை 6 மணிக்குமேல் திருப்பதி மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் ‘சிகர’ நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11.30 மணிவரை கருடசேவை (தங்கக்கருட வாகன வீதிஉலா) நடக்கிறது.
அதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு தலைமையில் திருமலையில் உள்ள ராம்பகீசா போலீஸ் கட்டுப்பாட்டு மையத்தில் கருடசேவை பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
அதன்பிறகு போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும். திருப்பதியில் இருந்து திருமலை, திருமலையில் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் பாதுகாப்பாகச் செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் 4 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்குமேல் திருப்பதி மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை, தடை விதிக்கப்படுகிறது.
திருப்பதியில் 5 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து திருமலைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நவீன கேமராக்கள், டிரோன்கள் மூலமாக தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும். ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலமாக பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கருடசேவைக்காக திருமலையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள நான்கு மாட வீதிகளில் கண்காணிப்பு மையங்களும், பாதை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களில் இருந்து பக்தர்கள் கருடசேவையை எளிதில் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது.
போலி இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக திருமலையின் பெருமையை சீர்குலைக்கும் எந்த ஒரு தவறான தகவல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கருட சேவைக்கு வரும் பக்தர்கள் போலீசாருக்கும், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும். கருட சேவைக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆயிரம் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பதியில் 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






