திருப்பதி பிரம்மோற்சவம்.. ஆழ்வார் தீர்த்தத்தில் விமரிசையாக நடைபெற்ற சக்கரஸ்நானம்
திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடு மற்றும் வாகன சேவை நடைபெற்றது. நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர், உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி, நம்மாழ்வார் உள்ளிட்டோருக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இரவு 7 மணியளவில் அஸ்வ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிலையில் விழாவின் நிறைவு நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆழ்வார் தீர்த்தத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சக்கரஸ்நானம் விமரிசையாக நடைபெற்றது. இன்று மாலையில் உற்சவ மூர்த்திகள் கோவிந்தராஜ சுவாமி கோவிலுக்கு திரும்பும் வைபவம் நடைபெறும்.
இன்றைய நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான துணை செயல் அதிகாரி சாந்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.