பசிக்கு இடமில்லாத புனித தலம்.. தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் விநியோகம்


பசிக்கு இடமில்லாத புனித தலம்.. தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் விநியோகம்
x

திருமலை அன்னதானக்கூடத்தில் பக்தர்கள் உணவருந்தும் காட்சி

தினத்தந்தி 13 Jan 2026 5:01 PM IST (Updated: 13 Jan 2026 5:47 PM IST)
t-max-icont-min-icon

திருமலை மட்டுமல்லாமல், நாடு முழுவதும் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும் அன்னப்பிரசாத திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பகவானை தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் வயிறார உண்டு, மனநிறைவுடன் செல்கின்றனர். இதனால் இந்த தலம் 'பசிக்கு இடமில்லாத புனிதத் தலம்' என்றும் போற்றப்படுகிறது.

அன்னப்பிரசாத திட்டத்தின் சிறப்புகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னப்பிரசாதத் துறையின் முயற்சிகளால், விரிவான ஒழுங்கமைக்கப்பட்ட உணவு விநியோக அமைப்பு மூலம் தினமும் சுமார் மூன்று லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

சமையல் அறைகள்

திருப்பதி தேவஸ்தான அன்னப்பிரசாதத் துறை 3 முக்கிய சமையல் அறைகளை கொண்டது. அவற்றில் மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம், அட்சய சமையல் அறை, வகுளமாதா சமையல் அறை ஆகியவை ஆகும். இவை அனைத்தும் இரவு பகலாக இயங்கி வருகின்றன.

மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகத்தில் சுமார் 74 ஆயிரம் பக்தர்களுக்கு சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

அட்சய சமையல் அறை சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் பக்தர்களின் அன்னப்பிரசாதத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அதே நேரத்தில் வகுளமாதா சமையல் அறை மூலம் சுமார் 77 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

நித்ய அன்னதானத் திட்டம்

ஸ்ரீவெங்கடேஸ்வரா நித்ய அன்னதானத் திட்டத்தை ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி என்.டி. ராமாராவ் 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி திருமலையில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் 1994-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி ஒரு அறக்கட்டளையாக மாற்றப்பட்டது.

ஆந்திர மாநில தற்போதைய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வழிகாட்டுதல் கீழ் அன்னப்பிரசாதத் திட்டம் இப்போது திருமலையில் உள்ள பல்வேறு இடங்களில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மிக விரைவில் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அனைத்து உள்ளூர் கோவில்களிலும் அன்னப்பிரசாத செயல்பாடு தொடங்கப்படும்.

உணவு விவரங்கள்

மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகத்தில் தினமும் காலையில் கோதுமை ரவை உப்புமா, சூஜி ரவை உப்புமா, சேமியா உப்புமா, பொங்கல், சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்படுகின்றன. மதியம் சர்க்கரை பொங்கல், சாதம், காய்கறிகள், சட்னி, வடை, சாம்பார், ரசம் மற்றும் மோர் என 8 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. மாலையில் சர்க்கரை பொங்கல், சாதம், காய்கறி, சட்னி, வடை, சாம்பார், ரசம் மற்றும் மோர் என 8 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.

அட்சய சமையல் அறையில் தினமும் கோதுமை ரவை உப்புமா, சூஜி ரவை உப்புமா, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், சுண்டல், பால், தேநீர் மற்றும் காபி ஆகியவை வழங்கப்படுகின்றன. அதிக பக்தர்கள் வரும் நாட்களில் மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு மோர், பாதாம் பால், பிஸ்கட் மற்றும் ஜூஸ் பாக்கெட்டுகளும் வினியோகிக்கப்படுகின்றன.

வகுளமாதா சமையல் அறையில் சுமார் 1,000 அன்னப்பிரசாதப் பணியாளர்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களின் அயராத முயற்சியால் பக்தர்கள் தங்கும் வளாகம்- 2,4,5ல் உள்ள உணவுக் கூடங்கள், மத்திய விசாரணை அலுவலகம், அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 1, ராம் பகீச்சா விருந்தினர் மாளிகை, அஞ்சனாத்ரி நிலையம் குடில்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் உப்புமா தயாரித்து வழங்கப்படுகின்றன. திருமலையில் அனைத்து நேரங்களிலும் பக்தர்களுக்கு உணவு தடையின்றி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story