விழுப்புரம் மாவட்டத்தில் 1,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

விநாயகருக்கு சுண்டல், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் மற்றும் பழங்கள் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தி விழாவிற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுவர்ணம் பூசப்பட்டும், வாழை தோரணங்கள் கட்டப்பட்டும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் காலை 6 மணிக்கு விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு கணபதி ஹோமமும், 10 மணிக்கு விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் காமராஜர் வீதியில் அமராபதி விநாயகர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 6 மணிக்கு கலச பூஜையும், 8 மணிக்கு அபிஷேகமும், 9 மணிக்கு மகா தீபாராதனையும், 9.15 மணிக்கு கலசாபிஷேகமும் நடந்தது. பின்னர் 10.30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் அமராபதி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 8 மணிக்கு சாமி வீதியுலா நடைபெறுகிறது.
விழுப்புரம் பூந்தோட்டம் மேல்வன்னியர் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் காலை 7 மணிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு செல்வ விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும், 9 மணிக்கு சாமி வீதியுலாவும் நடக்கிறது.
இதேபோல் விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள வலம்புரி கோட்டை விநாயகர், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தேரடி பிள்ளையார், விழுப்புரம் ரெயிலடி விநாயகர், கோவிந்தசாமி நகர் அமிர்தகணபதி, சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. நகரில் உள்ள விநாயகர், தோகைப்பாடி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிலைகள் வைத்து வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் 5 அடி முதல் 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விநாயகருக்கு சுண்டல், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் மற்றும் பழங்கள் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து விநாயகருக்கு நைவேத்யங்கள் படைத்து வழிபட்டனர்.






