சமையலுக்கு சிறந்தது நாட்டு தக்காளியா.. ஹைபிரிட் தக்காளியா..? - விரிவான அலசல்

நாட்டு தக்காளி உள்ளூர் மண், காலநிலைக்கு ஈடு கொடுத்து வளரும். இதன் வளர்ச்சிக்கு குறைவாக உரம் போட்டால் போதும்.
சமையலில் தவிர்க்க முடியாத காய்கறிகளுள் தக்காளி முக்கியமானது. கிட்டத்தட்ட எல்லாவிதமான சமையலிலும் இடம் பிடித்துவிடும். நாட்டு தக்காளி, ஹைபிரிட் என்னும் மரபணு மாற்ற தக்காளி என இரு வகை தக்காளிகள் சந்தையில் புழக்கத்தில் இருக்கின்றன. அவை பார்ப்பதற்கு ஒரே மாதிரி தெரிந்தாலும் சுவை, அளவு, தோல் தடிமன், ஊட்டச்சத்து நன்மைகளில் சில மாறுபாடுகளை கொண்டிருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.
மரபணு மாற்ற தக்காளி (ஹைபிரிட்)
இரண்டு அல்லது பல்வேறு தக்காளி வகைகளை இணைத்து விஞ்ஞான முறையில் உருவாக்கப்படுபவை ஹைபிரிட் தக்காளிகள் எனப்படுகின்றன. இவை அதிக விளைச்சலை கொடுக்கக்கூடியவை. எளிதில் அழுகாது, சேதமடையாது என்பதால் விற்பனைக்கு ஏற்றவை.
முக்கிய அம்சங்கள்
வடிவம் - அளவு: உருண்டை வடிவத்தில் காட்சியளிக்கும். பெரும்பாலும் எல்லா தக்காளிகளும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டிருக்கும்.
நிறம்: முழுவதும் சிவப்பு நிறத்தில் அழகாக காட்சியளிக்கும்.
சுவை: குறைந்த புளிப்பு சுவை கொண்டிருக்கும். சற்று இனிப்பு சுவையும் வெளிப்படும். அமிலத்தன்மை குறைவாக இருக்கும்.
அமைப்பு: தோல் தடிமனாக இருக்கும். விதைகள் குறைவாக இருக்கும். உள்புற கூழ் பகுதி ஒருவித கெட்டித்தன்மை கொண்டிருக்கும்.
ஆயுள்: நீண்ட நாள் கெடாமல் இருக்கும். எளிதில் சேதம் அடையாது.
வளரும் சூழல்: இதன் வளர்ச்சிக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் தேவைப்படும். அதேவேளையில் அதிக விளைச்சலை கொடுக்கும்.
சமையல் பயன்பாடு: சாலட், சாண்ட்விச், சாஸ் போன்றவை தயாரிப்புக்கு ஏற்றது.
நாட்டு தக்காளி
தலைமுறை தலைமுறையாக விவசாயிகள் இயற்கை சூழலில் விளைவித்தவை நாட்டு தக்காளிகள் எனப்படுகின்றன. இவை அதிக மரபணு மாற்றத்துக்கு உட்படாதவை. ஏற்கனவே விளைந்த பழுத்த தக்காளியில் இருந்து விதைகளை எடுத்து பக்குவப்படுத்தி மீண்டும் விளைவிக்கப்படுபவை.
முக்கிய அம்சங்கள்
வடிவம்-அளவு: முழுமையாக உருண்டை வடிவத்தில் காட்சியளிக்காது. சீரற்ற வடிவம் கொண்டிருக்கும்.
நிறம்: அடர் சிவப்பு அல்லது ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த நிறம் கொண்டிருக்கும். சில சமயங்களில் பச்சை, பச்சை-சிவப்பு, மஞ்சள் நிறங்களில் காட்சியளிக்கும்.
சுவை: புளிப்பு, காரச்சுவை, அதிக அமிலத்தன்மை கொண்டவை. குழம்பு, சட்னிக்கு ஏற்றவை.
அமைப்பு: மென்மையானது, தோல் பகுதி மெலிதாக இருக்கும். அதிக விதைகள், அதிக கூழ் தன்மை கொண்டிருக்கும்.
ஆயுள்: அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும். மெல்லிய தோல்கொண்டிருப்பதால் விரைவாக கெட்டு விடும்.
வளரும் சூழல்: உள்ளூர் மண், காலநிலைக்கு ஈடு கொடுத்து வளரும். இதன் வளர்ச்சிக்கு குறைவாக உரம் போட்டால் போதும்.
சமையல் பயன்பாடு: ரசம், சாம்பார், தக்காளி தொக்கு போன்ற புளிப்புச்சுவை தேவைப்படும் உணவுகளுக்கு ஏற்றது.
ஊட்டச்சத்து வேறுபாடு
நாட்டு தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருக்கும். ஹைபிரிட் தக்காளியில் அதன் வகையை பொறுத்து மிதமாகவோ, அதிகமாகவோ இருக்கலாம். அதேபோல் நாட்டு தக்காளியில் லைக்கோபீன் என்னும் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருக்கும். ஹைபிரிட் தக்காளியின் வகையை பொறுத்து லைக்கோபீன் அளவு மாறுபடும். இரண்டிலுமே நார்ச்சத்து போதுமான அளவில் இருக்கும். அதிக ரசாயன உரமின்றி வளர்க்கப்படுவதால் நாட்டு தக்காளியில் ஊட்டச்சத்து அடர்த்தி அதிகமாக இருக்கும். ஹைபிரிட் தக்காளி, வளர்ப்பு முறையை பொறுத்து மாறுபடும்.
சுவை வேறுபாடு
நாட்டு தக்காளியில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருப்பதால் புளிப்பு சுவை அதிகமாக காணப்படும். ஹைபிரிட் தக்காளிகள் பலருக்கும் பிடிக்கும் வகையில் மிதமான புளிப்பு சுவையுடன் இருக்கும்.
விலை வேறுபாடு
ஹைபிரிட் தக்காளிகள் அதிக விளைச்சல் கொண்டிருப்பதுடன் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க முடியும் என்பதால் நாட்டு தக்காளியை விட விலை சற்று குறைவாக இருக்கும்.
எதை தேர்வு செய்வது?
காரமான குழம்பு, சட்னி, ஊறுகாய் தயார் செய்வதற்கு நாட்டு தக்காளி சிறந்தது. சாலட், சாண்ட்விச், சாஸ் தயாரிப்புக்கு ஹைபிரிட் தக்காளி உகந்தது.






