கரூர் துயரம்: தவெக ஆனந்த், நிர்மல் குமார் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. ஆகவே முன் ஜாமீன் தர இயலாது என மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
மதுரை,
கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணைபொதுச்செயலாளர் நிர்மல் குமாரின் முன் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை துவங்கியது. மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி ஜோதிராமன் முன்பாக முன் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. நாமக்கல் விவகாரத்தில் ஒருவரின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கூட்டத்தின் ஏற்பாட்டாளர் மாவட்ட செயலாளர் மதியழகன்தான். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எங்கள் தொண்டர்களை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே தாமதமாக வந்தது போல் கூறப்படுகிறது. எப்.ஐ.ஆர்-ரில் தவறான தகவல் உள்ளது.வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கோரிய போது காவல்துறை மறுத்திருக்கலாம்.கூட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது கரூரில் நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல, விபத்து என ஆனந்த் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
தப்பி ஓடிய தவெகவினர் - அரசுத் தரப்பு வாதம்
கரூரில் சம்பவம் நடந்தவுடன் தவெகவினர் தப்பி ஓடிவிட்டனர். காத்திருந்தவர்களுக்கு தவெக சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. தலைமறைவாவது ஏற்கத்தக்கது அல்ல. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன் ஜாமீன் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். முன் ஜாமின் வழங்கக்கூடாது என புஸ்ஸி ஆனந்த், நிர்மல் மீதான முன்ஜான் மனு விசாரணையில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதி கரூரில் 41 பேர் பலியான வழக்கில் ஆனந்த், நிர்மல் குமார் முன் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி ஜோதிராமன் ஒத்தி வைத்தார்.
இந்தநிலையில், கரூர் நெரிசல் வழக்கில் 2-ம் குற்றவாளியாக ஆனந்த், 3-ம் குற்றவாளியாக நிர்மல் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கோர்ட்டை தொந்தரவு செய்கிறது. மூத்த ஐபிஎஸ் அதிகாரியை கொண்டு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. ஆகவே முன் ஜாமீன் தர இயலாது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன் என நீதிபதி ஜோதிராமன் கூறினார்.






