டெட் தேர்வு; சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

ஆசிரியர் பணிக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்கிறது.
சென்னை,
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் டி.இ.டி., தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். இதில் ஓய்வு பெற 5 ஆண்டுகள் உள்ளவர்களுக்கு விதிவிலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 2 லட்சம் ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
இத்தீர்ப்பு எதிரொலியாக தமிழக அரசு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் சிறப்பு டி.இ.டி., தேர்வு நடத்தி அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்யலாம் எனவும், பணியாற்றிய அனுபவம் கருதி தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்கலாம் உள்ளிட்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகின.
டி.இ.டி., தேர்வில் ஏற்கனவே தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுதாக்கல் செய்வது தான் பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும் என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து ஆசிரியர் பணிக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டெட் தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்கங்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி இருந்தார். நீதிமன்ற உத்தரவால் தமிழ்நாட்டில் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் பாதிப்படைவர் என்று ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இதற்கிடையே கேரளா, தெலுங்கானா, உ.பி., உள்ளிட்ட சில மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டை பரிசீலனை செய்ய வலியுறுத்தி சீராய்வு மனுத்தாக்கல் செய்யும் முடிவு எடுத்துள்ளதால் தமிழக அரசும் இந்த முடிவை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






