இந்திய குடும்பங்களில் மட்டும் 34,600 டன் தங்கம் இருப்பு


இந்திய குடும்பங்களில் மட்டும் 34,600 டன் தங்கம் இருப்பு
x

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்க இருப்புகளைவிட அதிகம் என சொல்லப்படுகிறது.

சென்னை,

தங்கம் உலோகம் மட்டுமல்ல. அது முக்கிய முதலீடாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், தங்கம் ஆபரணமாக மட்டும் பார்ப்பது கிடையாது. கலாசாரம், பாரம்பரியம், குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள்.

உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்க நுகர்வு செய்வதில் இந்தியாதான் இருக்கிறது. காரணம், வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமாவது இருக்க வேண்டும் என்ற முனைப்பில் சிறுக சிறுக பணம் சேர்த்து வாங்கும் வழக்கம் இன்றளவும் இந்திய குடும்பங்களில் இருந்து வருகிறது. அதிலும், இந்தியாவில் திருமணம், விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளின் போது தங்கம் வாங்குவது பாரம்பரியாக இருக்கிறது.

இந்தியாவில் தங்க உற்பத்தி மிகக்குறைவாக இருப்பதால், தங்க நுகர்வுத் தேவையை பூர்த்தி செய்ய பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்திய குடும்பங்களில் தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கையோ, அதன் மீதான விருப்பமோ கொஞ்சமும் குறையவில்லை என்பதை பல தங்கம் சார்ந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அப்படி ஒரு புள்ளி விவரத்தைத்தான் உலக தங்க கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்திய குடும்பங்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 34,600 டன் தங்கம் இருப்பு இருப்பதாக சொல்லப்பட்டு உள்ளது. இது ஆபரணமாகவோ, நாணயமாகவோ, கட்டியாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் பார்க்கும் போது, இதன் மதிப்பு சுமார் ரூ.337 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.

இந்த தங்க இருப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 88.8 சதவீதம் எனவும், இந்திய குடும்பங்களில் இருக்கும் தங்க இருப்பு என்பது, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்க இருப்புகளைவிட அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு அதாவது, கடந்த 2023-ம் ஆண்டு உலக தங்க கவுன்சில் இதேபோல் வெளியிட்டிருந்த புள்ளி விவரங்களில் இந்திய குடும்பங்களில் சுமார் 25 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக சொல்லப்பட்டு இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 9 ஆயிரத்து 600 டன் வரை தங்க இருப்பு இந்திய குடும்பங்களில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story