3 மனைவி, 9 குழந்தைகள்... 9 ஆண்டுகளாக கணவரின் திரைமறைவு வேலையால் குடும்பத்தினர் அதிர்ச்சி

வீட்டின் உள்ளே சென்ற மகன் ரூ.4.6 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்களை 20 நிமிடங்களில் எடுத்து கொண்டு தப்பி விட்டார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் பாபாஜன் (வயது 35). இவருக்கு 3 மனைவிகள், எட்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் 9 குழந்தைகள் உள்ளனர். மனைவிகளை ஸ்ரீரங்கப்பட்டினா, அனேகல் மற்றும் சிக்கபல்லாபுரா என வேறு வேறு இடங்களில் தங்க வைத்து, குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
அவர்களுக்கு மற்றொருவரை பற்றிய விவரம் தெரியாது. பாபாஜன், தேவையேற்படும்போது ஒவ்வொரு மனைவியின் வீட்டுக்கும் சென்று வருவார். ஆனால், நிலையான வேலை எதுவும் இல்லாமல் போன சூழலில், வருவாய்க்கு வழியின்றி தவித்துள்ளார்.
அதனால், அதிர்ச்சியான முடிவை எடுத்துள்ளார். குறைந்த நாட்களில் நிறைய வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக வீடுகளில் திருடுவது என முடிவு மேற்கொண்டார். ஆனால், உதவிக்கு யாராவது வேண்டுமே என நினைத்த அவர், 16 வயது மகனை அவருடன் சேர்த்து கொண்டார்.
வீடுகளில் கதவு திறந்து கிடக்கின்றனவா? என பார்ப்பது அல்லது பெண்கள் பால்கனியில் இருக்கும்போது, அண்டை வீட்டாரிடம் அரட்டை அடித்து கொண்டிருக்கும்போது, அவர்களை கண்காணித்து வருவார். இதில், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவார்.
ஒரு கட்டத்தில், போலீசாரின் நெருக்கடி அதிகரித்ததும், மகனை இதில் ஈடுபடுத்தியுள்ளார். ஏனெனில், சிறுவர்களுக்கு நீண்டகால தண்டனை கிடையாது. அவர்களை கொடூர குற்றவாளிகளுடன் சிறையில் தள்ளுவதும் கிடையாது என தெரிந்து வைத்திருக்கிறார்.
இதன்படி, அவர் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் வீட்டுக்கு 2 பேரும் செல்வார்கள். மகனை அந்த பகுதியில் இறக்கி விட்டு விட்டு, சரியான தருணத்தில் உள்ளே செல்லும்படி கூறுவார். அவர், பல்வேறு வீடுகளில் நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடியுள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் யாரிடமும் சிக்காமல், தப்பி வந்த பாபாஜன், சமீபத்தில் போலீசில் சிக்கியுள்ளார்.
அவர், பெட்டதாசனபுரா பகுதியில் ரோஜம்மா என்பவர் துணி காய போட பால்கனிக்கு சென்றபோது, அதனை கவனித்து, மகனுக்கு சிக்னல் கொடுத்துள்ளார். உடனே வீட்டின் உள்ளே சென்ற அவருடைய மகன், தங்க காதணிகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் என 20 நிமிடங்களில் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு தப்பி விட்டார். இவற்றின் மதிப்பு ரூ.4.6 லட்சம் என கூறப்படுகிறது.
இதுபற்றி உடனடியாக எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரித்து பாபாஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 188 கிராம் தங்கம், 550 கிராம் வெள்ளி மற்றும் 9 திருட்டு வழக்குகளில் பயன்படுத்திய 2 சக்கர வாகனம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். கணவரின் வேலை பற்றி அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.






