67 சதவீத வாக்குப்பதிவு நிதிஷ் குமாருக்கு ‘டாடா’ காட்டி விட்டது: பிரசாந்த் கிஷோர்

பீகாரில் 65 முதல் 67 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதனால், முடிவுகள் வெளிவரட்டும் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் வருகிற செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று மாலையுடன் 2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிந்தது.
இந்நிலையில், ஜனசுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, பீகாரில் தேர்தல் சூழல் அதிக குழப்பம் நிறைந்த ஒன்றாக உள்ளது. தேர்தலுக்கு பின்னரான அறிவியல் ரீதியிலான கருத்துகணிப்பு இன்றி, தேர்தல் முடிவை பற்றிய எந்தவொரு கணிப்பும் அடிப்படையற்றது.
நிதிஷ் குமார் வெளியேறுகிறார். இதனை மறக்க வேண்டாம் என கூறியுள்ளார். இதனால், நிதிஷ் குமாருக்கு இந்த தேர்தலுடன் ‘டாடா’ காட்டப்படும் என்ற வகையில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், பீகாரில் 65 முதல் 67 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதனால், முடிவுகள் வெளிவரட்டும் என்றார். பெண்கள் வாக்களிப்பது அதிகரித்திருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கிஷோர், ரூ.10 ஆயிரம் பணப்பலன், சைக்கிள் மற்றும் சீருடை விநியோகம் உள்ளிட்ட அரசு திட்டங்களால் இது நடந்திருக்கலாம் என்றார்.






