90 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீசுவரர்கள்; குற்ற பின்புலம் கொண்டோர் 100 பேர்: பீகாரின் வெற்றிக்கு பின் பணபலமா? அதிர்ச்சி தகவல்

243 பேரில், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 111. அவர்களில் பெண்கள் 29 பேர் ஆவர்.
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளை வென்றுள்ளது. அவற்றில், பா.ஜ.க. 89 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களையும் வென்றுள்ளது. மத்திய மந்திரி சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19, மத்திய மந்திரி ஜீதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, ராஜ்ய சபை எம்.பி. உபேந்திரா குஷ்வஹாவின் ராஷ்டீரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை கைப்பற்றி உள்ளன.
இதனால், சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு தேர்தல் தொடர்பான பகுப்பாய்வு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 243 பேரில், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 111. அவர்களில் பெண்கள் 29 பேர் ஆவர். 84 பேர் 5 முதல் 12 வகுப்பு வரை படித்தவர்களாகவும், 7 பேர் எழுத படிக்க தெரிந்தவர்களாகவும் உள்ளனர்.
102 எம்.எல்.ஏ.க்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. கொலை வழக்குகள் (6 பேர்), கொலை முயற்சி வழக்குகள் (19 பேர்) மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும் (9 பேர்) இவர்கள் தொடர்புடையவர்களாக உள்ளனர்.
இவர்களில், பா.ஜ.க. அதிக அளவாக, கடுமையான குற்ற வழக்குகளை கொண்ட 43 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சி கடுமையான குற்ற வழக்குகளை கொண்ட 23 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.
243 பேரில் 218 பேர் கோடீசுவரர்கள் (90 சதவீதம்). 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 194 ஆக இருந்தது. கோடீசுவரர்களில், ஐக்கிய ஜனதா தளம் 78 பேருடன் முதல் இடத்திலும், பா.ஜ.க. 77 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. எம்.எல்.ஏ.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,192.93 கோடி. இதனால், இந்த தேர்தலில் பணபலம் விளையாடி இருக்க கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர்.
இவர்களில் குமார் பிரனாய் (பா.ஜ.க. எம்.எல்.ஏ.) ரூ.170.81 கோடிக்கு சொந்தக்காரர் ஆவார். மற்றொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. முராரி பஸ்வான் ரூ.6.53 லட்சம் பணத்துடன் ஏழ்மையான எம்.எல்.ஏ.வாக உள்ளார்.






