நண்பர்களுடன் மதுகுடித்த 9-ம் வகுப்பு மாணவன்.. தந்தைக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு

தான் மது குடித்தது தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என பயந்த மாணவன் அந்த விபரீத முடிவை எடுத்தான்.
சிக்கமகளூரு,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா மெல்லால் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் சரண்(வயது 13). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சரண் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் வெளியே விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றான். ஆனால் சிறுவனின் நண்பர்கள் மது அருந்த சென்றுள்ளனர்.
அப்போது அவர்களுடன் சென்ற சரணும் மது குடித்தான். இதையடுத்து தான் மது குடித்தது தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என சரண் பயந்துள்ளான். இதனால் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளான். பின்னர், பயத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, விஷம் குடித்தான்.
இந்நிலையில், இரவு நீண்ட நேரம் ஆகியும் சரண் வீட்டுக்கு திரும்பாததால், பயந்துபோன அவனது பெற்றோர் அவனை அப்பகுதி முழுவதும் தேடினர். இதில், அப்பகுதியில் ஒரு இடத்தில் தனியாக அமர்ந்திருந்த சரணை அவனது பெற்றோர் பாா்த்துள்ளனர். பின்னர், அவனிடம் ஏன் வீட்டுக்கு வரவில்லை என அவரது தந்தை கேட்டுள்ளார்.
அப்போது சரண், நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாகவும், அதனால் உங்களுக்கு (தந்தை) தெரிந்தால் திட்டுவீர்கள் என பயந்து வீட்டுக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளான். மேலும், பயத்தினால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்துவிட்டேன் என்றும் சரண் கூறியுள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






