கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்

விமானம் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு திப்ருகார் சென்றடைந்தது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டொலோய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பகல் 12.20 மணிக்கு திப்ருகார் விமான நிலையத்திற்கு செல்வதற்கான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானம் 1.25 மணிக்கு திப்ருகார் சென்றடையும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், அதன் இறக்கை பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த விமானம் உடனடியாக கவுகாத்தி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு அந்த விமானத்தில் பொறியாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்தனர். இதையடுத்து அந்த ‘ஏர் இந்தியா’ விமானம் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு திப்ருகார் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.






