அமித்ஷாவின் குஜராத் பயணம் திடீர் ரத்து

அமித்ஷாவின் பயண ரத்துக்கான காரணம் பற்றி அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆமதாபாத்,
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நாளை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. இதன்படி, ஆமதாபாத் உணவு திருவிழாவை நாளை அவர் துவக்கி வைப்பார். ஆமதாபாத் சர்வதேச புத்தக திருவிழா 2025 நிகழ்ச்சியையும் துவக்கி வைப்பார் என கூறப்பட்டது.
இதேபோன்று, மெஹ்சானா நகரில் போரியாவி பகுதியில் தூத்சாகர் பால்பண்ணை தொடக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவின் இந்த குஜராத் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும், வீடியோ கான்பரன்சிங் வழியே போரியாவியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடும் என அக்கட்சியின் மக்களவை செய்தி தொடர்பாளர் பிமல் ஜோஷி கூறினார்.
இந்த பயண ரத்துக்கான காரணம் பற்றி அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்ச்சியாக அவர், அதுதொடர்பாக உயரதிகாரிகளிடம் ஆலோசனை உள்ளிட்ட விசயங்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால், பயண திட்டம் ரத்து செய்யப்பட்டு இருக்க கூடும் என நம்பப்படுகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த ஹுண்டாய் ரக கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பான பலத்த சத்தம், பல மீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் கேட்டது. புகை வான்வரை பரவியது.
சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. கார் வெடித்ததும், அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும், வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன. கார் பாகங்களும், மனித உடல்களும் பரவி கிடந்தன.
இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதவிர 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.






