குளிர்பானத்தில் மயக்க மருந்து.. சிறுமி கூட்டு பலாத்காரம் - போக்சோவில் காதலன் உள்பட 3 பேர் கைது

சமூக வலைத்தளம் மூலம் பழகி, ஆசைவார்த்தை கூறி சிறுமியை விடுதிக்கு வருமாறு அவரது காதலன் கூறியதாக கூறப்படுகிறது.
கண்ணூர்,
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள சொவ்வாய் பகுதியை சேர்ந்தவர் சங்கீத் (வயது 20). இவருக்கு, சமூக வலைத்தளம் மூலம் 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். பின்னர் அவர்கள் நெருங்கி பழகி வந்தனர்.
இதற்கிடையே சிறுமியை ஆசைவார்த்தை கூறி கண்ணூரில் உள்ள விடுதிக்கு வருமாறு சங்கீத் கூறினார். அதன்படி, சிறுமி அங்கு சென்றார். அங்கு முன்பதிவு செய்திருந்த அறைக்கு சிறுமியை சங்கீத் அழைத்து சென்று உள்ளார். மேலும் அவர் தனது நண்பர்களான ஆனப்பாலம் பகுதியை சேர்ந்த அபிஷேக் (20), வைத்தியர் பீடிகை பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) ஆகிய 2 பேரையும் விடுதிக்கு வரவழைத்தார்.
விடுதியில் வைத்து சிறுமிக்கு சங்கீத் குளிர்பானம் கொடுத்து உள்ளார். மயக்க மருந்து கலந்து இருந்ததை அறியாத சிறுமி, அதனை வாங்கி குடித்தாள். சற்று நேரத்தில் அவள் மயக்கம் அடைந்தாள். இதையடுத்து சங்கீத் உள்பட 3 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி கண்ணூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் கொடேரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் சிறுமியிடம் காதல் வயப்பட்டது போல சங்கீத் நடித்து விடுதிக்கு வரவழைத்ததும், அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சங்கீத், அபிஷேக், ஆகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கண்ணூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.






