ஆபரேஷன் சிந்தூரின் போது வீரர்களுக்கு குடிநீர், டீ, ஐஸ்கிரீம் கொடுத்த சிறுவனின் கல்வி செலவை ஏற்ற ராணுவம்


ஆபரேஷன் சிந்தூரின் போது வீரர்களுக்கு குடிநீர், டீ, ஐஸ்கிரீம் கொடுத்த சிறுவனின் கல்வி செலவை ஏற்ற ராணுவம்
x

இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.

சண்டிகர்,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.

இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பஞ்சாப் மாநிலத்தின் பெரோஷ்பூர் மாவட்டம் தாரா வாலி கிராமம் அருகே சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்த ராணுவ வீரர்களுக்கு குடிநீர், ஐஸ்கிரீம், பால், லெஸ்சி உள்ளிட்ட பானங்களை அந்த கிராமத்தை சேர்ந்த 10 வயதான 4ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சவான் சிங் கொடுத்துள்ளார். யாருடைய தூண்டுதலுமின்றி சிறுவன் ராணுவ வீரர்களுக்கு குடிநீர், குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொண்டு சென்று கொடுத்துள்ளார். எல்லையில் துப்பாக்கி சண்டை நடந்துகொண்டிருந்தபோதும் சிறுவன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளான்.

இந்நிலையில், சிறுவனின் துணிச்சலை பாராட்டியுள்ள இந்திய ராணுவம், சிறுவன் சவான் சிங்கின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும், இந்திய ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு தளபதி மனோஜ் குமார் சிறுவன் சவான் சிங்கை இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

1 More update

Next Story