ஆயுள் தண்டனைக் கைதியான சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 6 மாத இடைக்கால ஜாமீன்

மற்றொரு பாலியல் வழக்கிலும் ராஜஸ்தான் ஐகோர்ட்டு ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன. சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த மாதம், ராஜஸ்தான் ஐகோர்ட்டு ஆசாராமின் தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இன்று காலை, குஜராத் ஐகோர்ட்டு நீதிபதிகள் இலேஷ் ஜே. வோரா மற்றும் நீதிபதி ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், ஆசாராமின் வழக்கறிஞர் தேவ்தத் காமத், மேலும் 6 மாதங்கள் ஜாமீன் கோரி ராஜஸ்தான் ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவையும் மருத்துவ சான்றிதழைகளையும் சமர்ப்பித்தார். அவரது உடல்நிலை மற்றும் சிறையில் அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவ வசதிகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு குஜராத் ஐகோர்ட்டு அவருக்கு மேலும் 6 மாத காலம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கறிஞர், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்கள் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதை இருப்பதைக் குறிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய போதிலும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. மற்றொரு பாலியல் வழக்கிலும் ராஜஸ்தான் ஐகோர்ட்டு அவருக்கு 6 மாதம் ஜாமீன் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.






