உல்லாசம் அனுபவித்து தாயாக்கினார்... வாலிபர் மீது சிறுமி புகார்... அடுத்து நடந்த பரபரப்பு

கடந்த 7 ஆண்டாக இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டப்பள்ளாபுரா தாலுகா கரேனஹள்ளியை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. அப்போது கவுதம், சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானாள்.
இதையடுத்து திருமணத்துக்கு மறுத்த கவுதம், சிறுமியுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதை அறிந்த சிறுமி கவுதமிடம், திருமணம் செய்து கொள்ளும்படி வாக்குவாதம் செய்தார். ஆனால் கவுதம் சிறுமியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
தனது குழந்தைக்கு தந்தை கவுதம் தான் என்று கூறிய சிறுமி, தொட்டப்பள்ளாபுரா போலீசில் அவர் மீது புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கடந்த 7 ஆண்டாக இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிறுமியை, நேரில் சந்தித்த கவுதம் சமாதானமாக செல்லலாம் என்று கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் சிறுமிக்கு தொல்லை கொடுக்க தொடங்கினார். மேலும் குழந்தை பெற்ற மற்றொரு பெண்ணை, சிறுமிடம் காண்பித்து, இதுதான் எனது மனைவி என்று கூறியுள்ளார். இருப்பினும் சிறுமி, கவுதம் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
நேற்றும் இதுதொடர்பாக சிறுமி, கவுதம் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கவுதம் மற்றும் அவரது குடும்பத்தினர் சொந்த வீட்டுக்கு தீவைத்துவிட்டு, சிறுமியை அதில் தள்ளி கொல்ல முயன்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பிய சிறுமி, தொட்டப்பள்ளாபுரா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கவுதம், சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர்தான் எனது வீட்டுக்கு தீவைத்ததாக கூறினார்.
ஆனால் இதற்கு சிறுமி வீட்டுக்கு நான் தீவைக்கவில்லை, கவுதம், அவரது குடும்பத்தினர் தான் வீட்டுக்கு தீவைத்ததுடன், தீயில் தள்ளி என்னை கொல்ல முயன்றனர் என்று போலீசாரிடம் கூறினார். இதனால் உண்மையை கண்டறிய போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் கவுதம் மற்றும் அவரது குடும்பத்தினர் நாடகமாடியது தெரியவந்தது. அதாவது அவர்களே வீட்டுக்கு தீவைத்ததுடன் சிறுமியை தீயில் தள்ளி கொல்ல முயன்றதும், தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கவுதம், அவர்களது குடும்பத்தினரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






