மராட்டியம்: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - வங்காளதேச இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

பாதிக்கப்பட்ட சிறுமிகள் தொண்டு அமைப்பால் மீட்கப்பட்டனர்
மும்பை,
வங்காளதேச நாட்டை சேர்ந்த இளைஞர் ஜோஷிம் சொபூர் முல்லா (வயது 26). இவர் 2017ம் ஆண்டு வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். இவர் வங்காளதேசத்தில் இருந்து 2 சிறுமிகளை கடத்தி மராட்டியத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் தொண்டு அமைப்பால் மீட்கப்பட்டதையடுத்து ஜோஷிம் சொபிர் அவரது மனைவி மொர்ஷிதா மற்றும் ஜனா ரபுல் முல்லா ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை தானே மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சொபிருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த மொர்ஷிதா மற்றும் ஜனா ரபுல் முல்லாவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனை நிறைவடைந்த உடன் 3 பேரும் வங்காளதேசத்திற்கு நாடு கடத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






