பீகார் சட்டசபை தேர்தல்; பா.ஜ.க.வில் சேர்ந்த 2 நாளில் பிரபல நாட்டுப்புற பாடகிக்கு சீட் ஒதுக்கீடு

சமூக சேவையாற்றுவதற்காக நான் வந்துள்ளேன். பீகார் வளர்ச்சிக்கு பங்காற்றுவேன் என மைதிலி தாக்கூர் கூறினார்.
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 71 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 14-ந்தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 12 வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய 2-வது பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது. அதில், நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர், அலிநகர் தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மைதிலி, பீகார் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலம் அடைந்தவர்.
அவர் தேசிய, சர்வதேச நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். பீகார் நாட்டுப்புற கலைக்கு பங்காற்றியதற்காக சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதும் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
நாட்டுப்புற பாடகியான மைதிலி தாக்கூர், தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் உள்ளேன் என கட்சி தலைவர்களிடம் கூறிய நிலையில், அலிநகர் தொகுதிக்கான வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே அந்த தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக உள்ள மிஷ்ரிலால் யாதவ் கழற்றி விடப்பட்டு உள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை கட்சியில் மைதிலி சேர்க்கப்பட்டார். அவர் கூறும்போது, பிரதமர் மோடி மற்றும் பீகார் முதல்-மந்திரியால் நான் ஈர்க்கப்பட்டு உள்ளேன். சமூக சேவையாற்றுவதற்காக நான் வந்துள்ளேன். பீகார் வளர்ச்சிக்கு பங்காற்றுவேன் என கூறினார். இந்நிலையில், அவருக்கு தொகுதி (சீட்) ஒதுக்கப்பட்டு உள்ளது. கட்சியில் சேர்ந்த 2 நாளில் பிரபல நாட்டுப்புற பாடகிக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






