பீகார் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?

தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது
பாட்னா,
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நிதிஷ்குமாரின் அரசின் பதவி காலம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது.
இதையடுத்து, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 22-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன்படி, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இதனிடையே இன்னும் சில நாட்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பீகார் செல்கிறார். அங்கு அவர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ஆயுத காவல் படைகள், பிற மாநில காவல் பிரிவுகளின் 350 முதல் 400 கம்பெனிகள் வரவழைக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ஒரு கம்பெனி என்பது 70 முதல் 80 போலீசாரை கொண்டதாகும்.






