பீகார்: அமைச்சரவை குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை தீவிரம்


பீகார்: அமைச்சரவை குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை தீவிரம்
x
தினத்தந்தி 19 Nov 2025 8:58 AM IST (Updated: 19 Nov 2025 9:32 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தரப்பில் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் 10-வது தடவையாக பதவியேற்கிறார். நாளை (வியாழக்கிழமை) பதவியேற்பு விழா நடக்கிறது. பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் விழா நடக்கிறது.

பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜனதா கூட்டணி முதல்-மந்திரிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் பங்கேற்பதால், காந்தி மைதானம், பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நாளைவரை அனுமதி கிடையாது.

நிதிஷ்குமார் இன்று (புதன்கிழமை) தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறார். அத்துடன், பீகார் சட்டசபையும் இன்று கலைக்கப்படுகிறது. பின்னர், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார், புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மந்திரி பதவியை கைப்பற்ற பா.ஜனதா கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றன. பா.ஜனதாவுக்கு 16 மந்திரி பதவிகளும், ஐக்கிய ஜனதாதளத்துக்கு 14 மந்திரி பதவிகளும், லோக் ஜனசக்தி கட்சிக்கு 3 மந்திரி பதவிகளும், மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு மந்திரி பதவியும் அளிக்கப்படுகின்றன. பா.ஜனதா தரப்பில் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

எந்த கட்சிக்கு எந்த இலாகா என்பது குறித்து டெல்லியில் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கும், ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில், சபாநாயகர் பதவி எந்த கட்சிக்கு என்பதும் முக்கிய இடம்பிடித்துள்ளது. பதவிக்காலம் முடிவடைந்த சட்டசபையில் பா.ஜனதாவை சேர்ந்த நந்த கிஷோர் யாதவ் சபாநாயகராகவும், ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த நரேந்திர நாராயணன் யாதவ் துணை சபாநாயகராகவும் இருந்தனர்.

ஆனால், தற்போது இரு கட்சிகளுமே சபாநாயகர் பதவியை எதிர்பார்க்கின்றன. பா.ஜனதா தரப்பில் பிரேம் குமார் பெயரும், ஐக்கிய ஜனதாதளம் தரப்பில் விஜய் சவுத்ரி பெயரும் பரிசீலிக்கப்படுகின்றன. இப்பிரச்சினையில் இழுபறி நீடித்து வருவதால், கருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது.

1 More update

Next Story