ரெயில் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் 4-வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு

மும்பையில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் - மும்பை லோக்மான்யா திலக் ரெயில் நிலையம் இடையே தினமும் குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் இன்று காலையில் லோக்மான்யா திலக் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.
ரெயிலில் துப்புரவு ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயிலின் பி2 குளிர்சாதன பெட்டியின் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் 4-வயது சிறுவனின் உடல் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த துப்புரவு ஊழியர், உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து சிறுவனின் உடலை மீட்ட ரெயில்வே பாதுகாப்புப் படையினர், இதுகுறித்து ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






