முதல்-மந்திரி பதவி விவகாரம்: சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி - கர்நாடகத்திலும் ராஜஸ்தான் பாணி..?


முதல்-மந்திரி பதவி விவகாரம்: சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி - கர்நாடகத்திலும் ராஜஸ்தான் பாணி..?
x

கர்நாடகாவில் முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் காங்கிரஸ் மேலிடம் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் மேலிடம் முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் கடும் நெருக்கடியை சந்தித்தது.

அவர்கள் 2 பேருடனும் கட்சி மேலிட தலைவர்கள் 4 நாட்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில் சித்தராமையா முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டார். டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரி ஆக்கப்பட்டார். மேலும் முதல்-மந்திரி பதவி ஆளுக்கு 2½ ஆண்டுகள் என்று காங்கிரஸ் மேலிடம் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து 2½ ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. இதனையடுத்து சித்தராமையாவுக்கு எதிராக ஆளும் காங்கிரசில் திடீரென்று போர்க்கொடி எழுந்துள்ளது. அதாவது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் ஆதரவு மந்திரிகள் 2 பேர், 9 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.எல்.சி. என மொத்தம் 12 பேர் திடீரென்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று டெல்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலை நேரில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்த உள்ளனர். ஆனால் சித்தராமையா, எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் விருப்பத்திற்கு மாறாக கட்சி மேலிடம் முடிவு எடுத்தால் வரும் நாட்களில் ஆட்சி சுமுகமாக நடைபெறுவது சிரமம் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இதனால் டி.கே.சிவக்குமாருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் மேலிடம் தள்ளப்பட்டு உள்ளது. கர்நாடக அரசியலில் அடுத்து பல திருப்பங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

ராஜஸ்தான் பாணி....?

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான அசோக் கெலாட்டும், அந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த சச்சின் பைலட்டும் தான் காரணமாக இருந்தனர். ஆட்சி அமைந்ததும் அசோக் கெலாட் முதல்-மந்திரியாகவும், துணை முதல்-மந்திரியாக சச்சின் பைலட்டும் பதவி ஏற்றனர்.

அங்கு முதல்-மந்திரி பதவி முதல் 2½ ஆண்டுகள் அசோக் கெலாட்டுக்கு என்றும், அடுத்த 2½ ஆண்டுகள் சச்சின் பைலட்டுக்கு என்றும் காங்கிரஸ் மேலிடம் கூறியதாக சொல்லப்பட்டது. 2½ ஆண்டுகள் முடிவதற்குள் கடந்த 2020-ம் ஆண்டு சச்சின் பைலட் முதல்-மந்திரி பதவி கேட்டு 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் போர்க்கொடி தூக்கினார். இதனால் ராஜஸ்தான் மாநில காங்கிரசில் மோதல் உருவானது. இதையடுத்து சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்-மந்திரி பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

அதற்கு அடுத்து 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அதே பாணியில் தான் கர்நாடகத்திலும் தனிப்பெரும்பான்மையுடன் கடந்த 2023-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட நாள் இழுபறிக்கு பிறகே சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்க டி.கே.சிவக்குமார் விட்டுக்கொடுத்தார்.

அதுவும் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கூறியும் கேட்காத டி.கே.சிவக்குமார், சோனியாகாந்தியின் சமரச பேச்சுக்கு அடிபணிந்தார். அந்த சமயத்தில் சித்தராமையாவுக்கு 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி என்றும், அதற்கு அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி என்றும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.

தற்போது சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்று நேற்றுடன் 2½ ஆண்டுகள் முடிந்த நிலையில் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி கேட்டு 11 எம்.எல்.ஏ.க்கள் ேபார்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்களை பின்னால் இருந்து டி.கே.சிவக்குமார் இயக்குவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே 2020-ம் ஆண்டு ராஜஸ்தான் பாணியில் கர்நாடகத்திலும் வரும் நாட்களில் அதிரடி திருப்பமும் ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

1 More update

Next Story