குடியரசு தின விழாவில் 3-வது வரிசையில் அமரவைக்கப்பட்ட ராகுல் காந்தி, கார்கே மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்


மோடியும், அமித்ஷாவும் எதிர்க்கட்சித் தலைவர்களை வேண்டுமென்றே அவமதிக்கிறார்களா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி

டெல்லி கடமைப் பாதையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் 3-வது வரிசையில் அமர்ந்திருந்தனர். பின்னர் கார்கே மட்டும் முன் வரிசைக்கு மாற்றப்பட்டு, முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் அருகே அமர வைக்கப்பட்டார். இதற்கிடையே ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் 3-வது வரிசையில் அமர்ந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்க்கட்சித் தலைவர்களை அவமதிக்கும் செயல் என காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அளிக்கப்படும் இந்த மரியாதை தான் நாட்டின் மரபா? இது மத்திய அரசின் தாழ்வு மனப்பான்மையையும், விரக்தியையுமே காட்டுகிறது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று சாடியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், கடந்த 2014-ம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அவருடைய மகள் ஆகியோர் சோனியா காந்தியுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அன்று அத்வானிக்கு வழங்கப்பட்ட மரியாதை இன்று ஏன் ராகுல் காந்திக்கும், கார்கேவுக்கும் வழங்கப்படவில்லை? மோடியும், அமித்ஷாவும் எதிர்க்கட்சித் தலைவர்களை வேண்டுமென்றே அவமதிக்கிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 More update

Next Story